• Tue. Apr 30th, 2024

‘கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துங்கள்’: மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு!

தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் ‘ஒமிக்ரான்’ வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. அந்த வைரஸ், டெல்டா வைரசை விட 3 மடங்கு வேகமாக பரவக்கூடியது என்று நிபுணர்கள் கூறினர்.

ஒமைக்ரான் பரவலை தடுக்க பல்வேறு நாடுகள் சர்வதேச விமான போக்குவரத்தை நிறுத்தின. இருப்பினும், இந்தியா உள்பட 116 நாடுகளில் ஒமிக்ரான் பரவி விட்டது.


இந்தியாவில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 600-ஐ நெருங்கி வருகிறது. இந்தியாவில் 19 மாநிலங்களில் ஒமிக்ரான் கால் பதித்து விட்டது. அதிக பாதிப்பு நிறைந்த தமிழ்நாடு உள்பட 10 மாநிலங்களுக்கு மத்திய குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அடுத்தடுத்து மாநில அரசுகள் இரவு நேர ஊரடங்கை பிறப்பித்து வருகின்றன.


இந்த வாரம் புத்தாண்டு பிறக்கிறது. புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக மக்கள் பெருமளவு கூடுவது வழக்கம். இதனால் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே, பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு பல மாநிலங்கள் தடை விதித்துள்ளன.
இந்தநிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக பேரிடர் மேலாண்மை சட்டத்தின்கீழ் மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று ஒரு உத்தரவு பிறப்பித்தது.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மாவட்ட, உள்ளூர் மட்டத்தில் அமல்படுத்துவதற்காக கடந்த 21-ந் தேதி மத்திய சுகாதார அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் சில உத்தரவுகளை பிறப்பித்தது. அந்த கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், ஜனவரி 31-ந் தேதி வரை நீட்டிக்கப்படுகின்றன.


அதன்படி, பொது இடங்களில் எச்சில் துப்புவதற்கு தடை விதிக்க வேண்டும். கடைகளில் வாடிக்கையாளர்களிடையே சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். கூடுமானவரை வீட்டில் இருந்து பணியாற்றும் முறையை பின்பற்ற வேண்டும்.


கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை தீவிரமாகவும், கண்டிப்பாகவும் அமல்படுத்த வேண்டும். மாவட்ட அளவில் இவற்றை அமல்படுத்துவது, மாவட்ட கலெக்டர்களின் பொறுப்பு. சமூக இடைவெளியை பின்பற்ற செய்வதற்காக, மாநில அரசுகள் 144 தடை உத்தரவை பிறப்பிக்கலாம்.
கொரோனா விதிமுறைகளை மீறுபவர்கள் மீது பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படியும், இந்திய தண்டனை சட்டத்தின்படியும் உரிய நடவடிக்கை எடுக்கலாம்” என்று மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.


இதுபோல், அனைத்து மாநிலங்களின் தலைமை செயலாளர்களுக்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா நேற்று ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
நாடு முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஆனால், புதிய ஒமைக்ரான் வைரஸ் பரவி வருகிறது. இதன் பரவும் தன்மை டெல்டாவை விட 3 மடங்கு வேகமாக உள்ளது. ஒமைக்ரான் பாதிப்பு 600-ஐ நெருங்கி விட்டது. எனவே, மாநிலங்கள் உஷாராக இருக்க வேண்டும். மாவட்ட அளவில் கொரோனா நிலவரத்தை கலெக்டர்கள் கண்காணித்து வர வேண்டும்.


கடந்த 21-ந் தேதி மத்திய சுகாதார அமைச்சகம் பிறப்பித்த வழிகாட்டு நெறிமுறைகளை மாநிலங்கள் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். ஒரு வாரமாக 10 சதவீத பாதிப்பு இருந்தால், அத்தகைய பகுதிகளை நோய் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவித்து கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அமல்படுத்த வேண்டும். அதுபோல், ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் படுக்கைகள் 40 சதவீத அளவுக்கு நிரம்பினாலும் நோய் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கலாம்.


தேவைக்கேற்ப உள்ளூர் மட்டத்தில் கட்டுப்பாடுகளை அமல்படுத்தலாம். பண்டிகை காலத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்க கட்டுப்பாடுகளை விதிக்கலாம். ஆஸ்பத்திரிகளில் நிலவரத்தை கண்காணிக்க வேண்டும். ஆக்சிஜன் சப்ளை போதிய அளவுக்கு இருப்பதையும், அத்தியாவசிய மருந்துகள் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.


கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். தடுப்பூசி போடும் பணியை விரைவுபடுத்த வேண்டும். பரிசோதனை, கண்டறிதல், சிகிச்சை, தடுப்பூசி, கொரோனா விதிமுறைகளை பின்பற்றுதல் ஆகிய 5 அம்ச வியூகத்தை பின்பற்ற வேண்டும்.


பொது இடங்களில் முக கவசம் அணிவதையும், சமூக இடைவெளியை பின்பற்றுவதையும் கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும். ஒமிக்ரான் குறித்த வதந்திகளை தவிர்க்க மாநில அரசுகள் அடிக்கடி பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *