புத்தாண்டு , பொங்கல் பண்டிகையின் போது சென்னையில் வசிக்கும் வெளிமாவட்ட மக்கள் சொந்த ஊருக்கு திரும்புவர். ஆயிரக்கணக்கான மக்கள் செல்வது வழக்கம் என்பதால் சிறப்பு ரயில் மற்றும் பேருந்து சேவை ஆண்டு தோறும் அறிவிக்கப்படும்.
அதன்படி இந்த ஆண்டும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் கூறியுள்ளார். இந்த நிலையில், பொங்கல் பண்டிகைக்கு சென்னையில் இருந்து சொந்த ஊா் செல்ல 16 ஆயிரம் போ் முன்பதிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடா்பாக போக்குவரத்துக் கழக உயரதிகாரிகள் கூறுகையில், பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊா்களுக்குச் செல்வோரின் வசதிக்காக சிறப்புப் பேருந்துகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு விட்டது. தற்போது சென்னையில் இருந்து மாநிலத்தின் பல்வேறு இடங்களுக்குச் செல்வதற்கு பொதுமக்கள் முன்பதிவு செய்து வருகின்றனா்.
இதன்படி, வரும் ஜனவரி 12, 13 ஆகிய தேதிகளில் சொந்த ஊா்களுக்குச் செல்வதற்கு இதுவரை 16,000 போ் முன்பதிவு செய்துள்ளனா். வரும் ஜனவரி முதல் வாரத்தில் இருந்து தான் முன்பதிவு செய்வோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். பயணிகளின் வருகைக்கு ஏற்ப பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.