இன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து புதுக்கோட்டை மாவட்டம் மக்கள் தங்களது குறைகளை தீர்ப்பதற்காக பல்வேறு மனுக்களை கொடுத்தனர்.
அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் ஒடப்பவிடுதி ஊராட்சியைச் சேர்ந்த இருங்களன் விடுதி என்கிற கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் பாலசுப்பிரமணியன் என்பவர் தலைமையில் கோரிக்கை மனு கொடுக்க வந்திருந்தனர்.

அப்போது அவர்களில் பாலசுப்ரமணியன் என்பவர் கூறுகையில் எங்களது ஊர் இருங்களன்விடுதி என்ற கிராமம் ஆகும். கடந்த திமுக ஆட்சியில் ஜாதிய பெயர்களில் உள்ள ஊர்களின் பெயரை மாற்றிவிட்டு புது பெயர் சூட்ட வேண்டும் என்று அரசு ஆணை பிறப்பித்ததாகவும் கடந்த 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற உலக தண்ணீர் தினம் குறித்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் குறிப்பாக ஒடப்பவிடுதி கிராம சபை கூட்டத்தில் இருங்களன் விடுதி என்ற பெயரில் ஜாதியப் பெயர் இருப்பதாகவும் அந்தப் பெயரை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக அந்த ஊருக்கு பெரியார் தெரு என்று மாற்றப் போவதாகவும் எங்களுக்குத் தகவல் கிடைத்தது.

அதனால் கரம்பக்குடி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தித்து எங்களது கிராமத்தில் கள்ளர், பறையர், யாதவர், செட்டியார் என நான்கு சமுதாய மக்கள் இருக்கிறோம். நான்கு சமுதாய மக்களும் ஒற்றுமையாக தான் இருக்கிறோம். எங்களையெல்லாம் கலந்து ஆலோசிக்காமல் இருங்களன் என்கிற பெயரில் எந்த ஜாதி இருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள 1600 ஜாதி பட்டியலில் ஏதாவது ஒரு சாதியில் இருங்கன் என்று பெயர் இருக்கிறதா என்று கேட்டோம்.
அப்போது பணியில் இருந்த அதிகாரி நான் அந்த சமயத்தில் பணியில் இல்லை என்றும் ஊராட்சியில் போட்ட தீர்மானத்தை ஊரக உதவி இயக்குனருக்கு அனுப்பி இருக்கிறோம் என்றும் அது தடுக்க வேண்டும் என்று சொன்னால் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து தடுத்து வைத்துக் கொள்ளுங்கள் என்று தெரிவித்தார்கள். அதன்படி இன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுத்திருக்கிறோம். இவ்வாறு பெயர் மாற்றுவதால் எங்களுக்குப் பல சங்கடங்கள் உள்ளன. இதனால் எங்களது ஒட்டுமொத்த அடையாளங்களும் பாரம்பரியமும் அழிக்கப்படுகின்றன.
இந்த கிராமத்தில் வசிக்கும் அனைவரும் அனைத்து அரசு ஆவணங்களிலும் உள்ள பெயர் முகவரி மாற்றுவது மிகவும் சிரமத்திற்கு உள்ளாக்கும். வெளிநாடுகளில் உள்ளவர்கள் பாஸ்போர்ட் வைத்திருக்கிறார்கள். மேலும் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, பான் கார்டு உள்ளிட்ட அனைத்து அடையாளங்களிலும் இதே ஊர் என்றுதான் உள்ளன. எங்களது ஊரும் பெயரும் எங்களது அடையாளம். அதை இழக்க நாங்கள் விரும்பவில்லை.
அதனால் எங்க கிராமத்து மக்கள் எந்த விதமான போராட்டத்துக்கும் தயாராகி விட்டோம். இதில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் எங்களது அனைத்து அரசு ஆவணங்களையும் ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்து விட்டு தொடர் போராட்டம் நடத்துவதற்கும் ஆயத்தம் ஆகிவிட்டோம் என்றார்.




