கோவையில் அரசு நகரப் பேருந்தின் தானியங்கி கதவில் மாணவரின் பை சிக்கிய நிலையிலும், அதனை கவனிக்காமல் ஓட்டுநர் பேருந்தை தொடர்ந்து இயக்கிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை, காந்திபுரத்தில் இருந்து தினமும் நகரின் பல்வேறு பகுதிகளுக்கு நூற்றுக்கணக்கான அரசு நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. காலை மற்றும் மாலை வேளைகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்குச் செல்வோரின் வருகையால் இந்தச் பேருந்துகளில் கடுமையான கூட்ட நெரிசல் நிலவுவது வழக்கம். கடந்த காலங்களில் படியில் பயணித்து பயணிகள் கீழே விழுந்து விபத்துகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசுப் பேருந்துகளின் ஏறி, இறங்கும் வழிகளில் தானியங்கி கதவுகள் (Automatic Doors) பொருத்தப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இன்று காலை காந்திபுரத்தில் இருந்து நவஇந்தியா – பீளமேடு நோக்கிச் சென்று கொண்டு இருந்த ஒரு அரசு நகரப் பேருந்தின் பின்புறக் கதவு வழியாக மாணவர் ஒருவர் ஏறி உள்ளார். அவர் முழுமையாக உள்ளே செல்வதற்கு முன்பாகவே தானியங்கி கதவுகள் மூடப்பட்டதால், அந்த மாணவர் தோளில் மாட்டி இருந்த பை கதவின் இடுக்கில் பலமாகச் சிக்கிக் கொண்டது.
பேருந்தின் பக்கவாட்டு கண்ணாடியைப் (Side Mirror) பார்க்காமல் ஓட்டுநர் பேருந்தை அப்படியே இயக்கிக் கொண்டு சென்று உள்ளார். கதவில் பை சிக்கிய நிலையில் அந்த மாணவர் ஆபத்தான முறையில் பயணித்த காட்சியை, பேருந்துக்கு பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்து உள்ளார்.
தற்போது இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பொறுப்புடன் செயல்பட வேண்டிய பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரின் இந்த அலட்சியப் போக்கைக் கண்டித்து, சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.





