• Thu. Aug 13th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

40 ஆண்டுகளுக்குப் பிறகு தூர்வாரப்படும் அறந்தாங்கி வீரகாளியம்மன் கோவில் தெப்பக்குளம்!

Byமுகமதி

Aug 13, 2026

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு வீரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. அறந்தாங்கி நகருக்குள் உள்ள மிகப்பெரிய கோவில் என்பதாலும் அறந்தாங்கியில் உள்ள அனைத்து வியாபாரிகள் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களும் அமைப்புகளும் இனரீதியான மக்களும் தனித்தனியாக மண்டகப்படிதார்கள் எடுத்து நடத்துவதால் ஆடி மாதம் முழுவதும் இங்கு திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இக்கோவிலில் ஆண்டுதோறும் 30 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் நிறைவு நாளில், தெப்பக்குளத்தில் தெப்பத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
ஆனால், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தெப்பக்குளம் முறையாக தூர்வாரப்படாமல் இருந்ததால், குளத்தில் மண் மற்றும் சேறு அதிகளவில் தேங்கி, தெப்பம் விடுவதில் சிரமம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், தெப்பக்குளத்தின் முழுமையான பயன்பாடு இல்லாமல், ஒரு பகுதியில் மட்டும் தெப்பம் அமைத்து சுவாமி தரிசனம் செய்யும் நிலை இருந்து வந்தது. மற்ற கோவில்களில் உள்ளது போல் தண்ணீருக்குள் தெப்பம் இழுக்காமல் நிலை தெப்பமாக அமைத்து தான் இந்த திருவிழா நடத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில், கோவில் மாகாணத்தார்கள், வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில், தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான ஜா. முகமது பர்வேஸ் அவர்களிடம் தெப்பக்குளத்தை தூர்வாரி சீரமைக்க தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டது.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்ற அமைச்சர் முகமது பர்வேஸ், உடனடியாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் பேசி, தேவையான நிதியைப் பெற்று தெப்பக்குளத்தை தூர்வார நடவடிக்கை மேற்கொண்டார்.

இதன் தொடர்ச்சியாக, 40 ஆண்டுகளுக்குப் பிறகு அறந்தாங்கி வீரகாளியம்மன் கோவில் தெப்பக்குளம் தூர்வாரும் பணி நேற்று தொடங்கியது.
தூர்வாரும் பணியை வரவேற்கும் விதமாக, அறந்தாங்கி வர்த்தக சங்கத் தலைவர் தங்கதுரை, பொதுமக்கள், கோவில் மாகாணத்தார்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, நீண்டகால கோரிக்கையை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுத்த அமைச்சர் முகமது பர்வேஸுக்கு நன்றி தெரிவித்தனர்.

மேலும், தமிழக வெற்றிக் கழக அறந்தாங்கி நகரச் செயலாளர்கள் M. முகமது ராவுத்தர், VGS. செந்தில்குமார், ஒன்றியச் செயலாளர்கள் ஆண்ட்ரூஸ் பாண்டியன், அயூப்கான், நகர மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

நீண்டகாலமாக நிலுவையில் இருந்த தெப்பக்குளம் தூர்வாரும் பணி தற்போது தொடங்கியுள்ளதால், இந்த ஆண்டு தெப்பத் திருவிழா நடத்த முடியாவிட்டாலும் இனிவரும் ஆண்டுகளில் தெப்பத் திருவிழாவை முழுமையாகவும் சிறப்பாகவும் நடத்துவதற்கு வழிவகை ஏற்பட்டுள்ளதாக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.