எதிர்காலத்திற்கு ஏற்ற ஜவுளி மற்றும் தொழில்நுட்பச் சூழலை உருவாக்கும் வகையில், இந்திய ஐடிஎம்இ சொசைட்டி சார்பில் நொய்டாவில் வரும் டிசம்பர் 4-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை 6 நாட்கள் இந்திய சர்வதேச ஜவுளி இயந்திரக் கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் 95 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் 1,800-க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் பங்கேற்க உள்ளனர். இது குறித்த ரோடு ஷோ கோவை விமான நிலைய சாலையில் உள்ள பேர்பீல்ட் பை மேரியாட் ஓட்டலில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் இந்திய ஐடிஎம்இ சொசைட்டி தலைவர் கேதன் சங்வி, செயலாளர் சீமா ஸ்ரீவாஸ்தவா மற்றும் பொருளாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில் கோவை ஜவுளி உற்பத்தி துறையினர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், இது சொசைட்டி நடத்தும் 12-வது கண்காட்சியாகும் என்றும், சுமார் 2 லட்சத்து 40 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் 18 அரங்குகளில் நடைபெறும் மிகப்பெரிய கண்காட்சியாக இது இருக்கும் என்றும் தெரிவித்தனர்.
மேலும், நார், நூல் மற்றும் துணி வகைகள் முதல் முழுமையான ஆடைகள் வரை அதிநவீன கண்டுபிடிப்புகள் இதில் இடம்பெறும் என்றும், ‘மேக் இன் இந்தியா’ மற்றும் ‘தற்சார்பு இந்தியா’ போன்ற முன்முயற்சிகளை இது பிரதிபலிக்கும் என்றும் கூறினர். தொடர் நிகழ்வாக, கூட்டத்தில் கலந்து கொண்ட கோவை ஜவுளி உற்பத்தி துறை நிர்வாகிகளுக்கு கண்காட்சிக்கான அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டன.






