செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பழைய பெருங்களத்தூர் மண்டலம் 4-ல் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் சம்பள உயர்வு மற்றும் வார விடுமுறை கோரி மண்டல அலுவலக வளாகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 80-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டம், சிஐடியூ தாம்பரம் மாநகராட்சி தொழிற்சங்க பொதுச் செயலாளர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது. பணியாளர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்கள், தற்போது தினக்கூலியாக 350 ரூபாய் மட்டுமே வழங்கப்படுவதாகவும், அதை 500 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். மேலும், வார விடுமுறை வழங்கப்படாததால் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும் குற்றம்சாட்டினர்.

இந்த நிலையில், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மண்டல சுகாதார அலுவலர் CHO பூபேஷ், போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்களுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, பணியாளர்களின் கோரிக்கைகள் குறித்து தாம்பரம் மாநகராட்சி உயர் அதிகாரிகளிடம் எடுத்துரைத்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

இதனைத் தொடர்ந்து, அதிகாரிகளின் உறுதிமொழியை ஏற்றுக்கொண்ட தூய்மை பணியாளர்கள் தங்களது ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். பின்னர் அவர்கள் வழக்கமான பணிகளுக்குத் திரும்பினர்.
இந்த சம்பவத்தால் பழைய பெருங்களத்தூர் பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு நிலவியது.





