சென்னை தாம்பரம் சானடோரியம் ரெயில் நிலையத்தில், ஓடும் மின்சார ரெயிலில் பயணம் செய்த காவல் துறையின் தடய அறிவியல் பிரிவு பெண் அதிகாரியிடம் செல்போன் பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த அடோலின் பிரபா, சென்னை மயிலாப்பூரில் உள்ள காவல் துறையின் தடய அறிவியல் அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். லைட் ஹவுஸ் பகுதியில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி வரும் அவர், தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கிச் செல்லும் மின்சார ரெயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது சானடோரியம் ரெயில் நிலையத்தை கடந்தபோது, செல்போனில் பேசியபடி இருந்த அவரிடம் வடமாநிலத்தைச் சேர்ந்த அஜெய் என்ற நபர் கண் இமைக்கும் நேரத்தில் செல்போனை பறித்ததாக கூறப்படுகிறது. செல்போனை தடுக்க முயன்ற அடோலின் பிரபா, ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்ததில் முகம் மற்றும் தலையில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் தாம்பரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், பின்னர் மேல்சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இதற்கிடையில், செல்போனை பறித்ததாகக் கூறப்படும் அஜெயை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து ரெயில்வே பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைத்தனர். விசாரணையின்போது அவர் கஞ்சா போதையில் இருந்ததாகவும், போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் நீண்ட நேரம் ரகளையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

அதே நேரத்தில், அஜெயின் மனைவி கைக்குழந்தையுடன் காவல் நிலையத்திற்கு வந்து, தனது கணவரை விடுவிக்கக் கோரி ரெயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றதாகவும், மத்திய ரெயில்வே பாதுகாப்புப் படையினர் அவர்களை தடுத்து சமாதானப்படுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக தாம்பரம் இருப்புப் பாதை போலீசார் வழக்குப் பதிவு செய்து, பறிக்கப்பட்ட செல்போனை மீட்டதுடன், அஜெயை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
காவல் துறையில் பணியாற்றும் பெண் அதிகாரியே ஓடும் ரெயிலில் செல்போன் பறிப்பில் சிக்கி காயமடைந்த இந்த சம்பவம், பயணிகளிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.




