இளைஞர்களிடையே போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், “நஷா முக்த் யுவா விக்சித் பாரத்” மாவட்ட அளவிலான போட்டிகள் வருகிற ஜூலை 28-ஆம் தேதி காரைக்கால் பெருந்தலைவர் காமராஜர் கல்வியியல் கல்லூரி அரங்கத்தில் நடைபெற உள்ளதாக, மை பாரத் மையம், காரைக்கால் மாவட்ட இளையோர் அலுவலர் முனைவர் எம். ராம்சந்திரன் தெரிவித்தார்.

காரைக்காலில் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:
இந்திய அரசின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மை பாரத் (MY Bharat) மற்றும் தேசிய சேவைத் திட்டம் (NSS) இணைந்து இந்த மாவட்ட அளவிலான போட்டிகளை நடத்துகின்றன. இளைஞர்களிடையே போதைப்பொருளின் தீய விளைவுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்குவதில் இளைஞர்களின் பங்களிப்பை அதிகரிப்பதுமே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும் என்றார்.
இந்த போட்டிகளில் குழுப் பாடல், கவிதை, குழு நடனம், விவாதப் போட்டி, ரீல் உருவாக்கம் (Reel Making), தெருக்கூத்து, விழிப்புணர்வு வாசகங்கள் எழுதுதல் மற்றும் ஓவியப் போட்டி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் இடம்பெற உள்ளன. இதில் வெற்றி பெறும் போட்டியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுவதுடன், மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கவும் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.

காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த 15 முதல் 29 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் அனைவரும் இந்த போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்று, தங்களது திறமைகளை வெளிப்படுத்துவதோடு, “நஷா முக்த் யுவா விக்சித் பாரத்” என்ற தேசிய இலக்கை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
மேலும், போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர் MY Bharat அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம் என்றும், கூடுதல் விவரங்களுக்கு 97895 83510 என்ற கைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் மாவட்ட இளையோர் அலுவலர் முனைவர் எம். ராம்சந்திரன் தெரிவித்தார்.




