• Sun. Jul 26th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

யானைத்தந்தம் கடத்தி விற்கும் கும்பல் புதுக்கோட்டையில் ஆறு பேர் கைது..,

Byமுகமதி

Jul 26, 2026

ஈரோடு பகுதியில் இருந்து யானைத்தந்தம் இரண்டு கடத்தி வந்ததாக புதுக்கோட்டை வனச்சரகர் அலுவலகத்தில் யானை தந்தங்களை கடத்தி வந்த ஆறு பேர் குற்றவாளிகள் என வனச்சராக அலுவலர்கள் செய்தியாளர்களிடம் இன்று அறிமுகப் படுத்தினார்கள். இந்த குற்ற செயலில் ஒரு சிறுவனும் ஈடுபட்டிருப்பதாகவும் அவன் முகம் தெரிய வேண்டாம் என்பதற்காக அந்த சிறுவனைத் தவிர மற்ற ஆறு பேரையும் செய்தியாளர்களிடம் காண்பித்திருக்கிறார்கள்.

ஈரோடு பகுதியில் இருந்து யானைத் தந்தம் கடத்துவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்திருக்கிறது. அதனால் யானை தந்தம் வாங்கும் வியாபாரிகள் போல் மாறுவேடத்தில் தொடர்ந்து கண்காணித்து வந்ததில் ஈரோடு மற்றும் வெவ்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆறு பேரும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரும் இந்த செயலில் ஈடுபட்டு இருப்பதாக தொடர்ந்து அவர்களை கண்காணித்து வந்திருக்கிறார்கள். இந்த நிலையில் ஒவ்வொருவராக நேற்று மாலை கைது செய்திருக்கிறார்கள்.

அவர்களை கைது செய்து கொண்டு வந்து புதுக்கோட்டை வனச்சரகர் அலுவலகத்தில் வைத்து தீவிரமாக விசாரணை செய்ததில் அவர்களிடமிருந்து இரண்டு யானைத் தந்ததங்களும் அவர்கள் பயன்படுத்திய கைப்பேசிகளும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் பறிமுதல் செய்து இருக்கிறார்கள். அவர்கள் தாங்கள் யானைத் தந்தம் கடத்தியதை ஒத்துக் கொண்டிருக்கிறார்கள். எங்கிருந்து கடத்தினார்கள் இதுவரை எத்தனை முறை கடத்தி விற்பனை செய்திருக்கிறார்கள் என்பது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் சேகரித்த வனத்துறையினர் இது குறித்து செய்தியாளர்களிடம் தகவல் தர மறுத்து விட்டனர்.

சுமார் ஆறு மணி நேரம் செய்தியாளர்களும் ஒளிப்பதிவாளர்களும் காத்திருந்த நிலையில் குற்றவாளிகள் என்று சொல்லப்பட்டவர்களில் ஒரு சிறுவனைத் தவிர மற்ற ஆறு பேரையும் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்த பொருட்களையும் வனத்துறையினர் காண்பித்தனர். வனத்துறைக் காவலர்களிடம் சிக்கியவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சாமிநாதன் மற்றும் அருளானந்தம், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ரோகித், வினோத், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சிவக்குமார், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கார்த்திகேயன் ஆகிய ஆறு பேர் என்பது தெரிய வந்திருக்கிறது.

பின்னர் வனத்துறை அலுவலர்கள் இன்னும் அவர்களிடமிருந்து விவரம் சேகரிக்க வேண்டி இருக்கிறது என்றும் இன்று இரவுக்குள் நீதிமன்றத்தில் ஆசை படுத்தி விடுவோம் என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த யானைத்தந்தம் கடத்திய குற்றவாளிகளை வனத்துறை அலுவலர்களான நேத்ராவதி மற்றும் அருண்பிரகாஷ் ஆகியோர் தலைமையிலான வன காவலர்கள் பொறி வைத்து பிடித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. புதுக்கோட்டை மாவட்டம் கேப்பரை அருகில் வைத்து இவர்களை பிடித்ததாக சொல்லப்பட்டாலும் உண்மையிலேயே எங்கிருந்து பிடித்து வந்தார்கள் என்பது குறித்து வனத்துறையினர் அறிவிக்க மறுத்துவிட்டனர். இந்த இரண்டு தந்தங்களும் இந்திய சந்தை மதிப்பில் என்ன மதிப்பீடு என்பதும் வெளிநாடுகளில் இதன் மதிப்பு என்ன என்பதும் தெரியவில்லை.