நீட் தேர்வில் நடைபெற்றுள்ள முறைகேடுகளுக்கு எதிராகவும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் ஆதரவாக, மதுரையில் ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் திருப்பரங்குன்றம் ரயில் மறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

பாலக்காட்டில் இருந்து திருச்செந்தூர் செல்லும் ரயிலை மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் ரயில் நிலையம் அருகே மரிப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. திருப்பரங்குன்றம் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக DYFI மற்றும் தோழமை அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரண்டு வந்தனர்.
அப்போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் ரயில் நிலையத்திற்குள் நுழைய முயன்ற போராட்டக்காரர்களை தடுப்புகளை அமைத்து மறித்து நிறுத்தினர்.

இதனால், காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதமும் லேசான தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. மத்திய அரசு மற்றும் நீட் தேர்வுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பிய போராட்டக்காரர்கள், தடுப்புகளை மீறிச் செல்ல முயன்றதால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இன்னும் சற்று நேரத்தில் பாலக்காட்டில் இருந்து திருச்செந்தூர் செல்லும் ரயில் திருப்பரங்குன்றம் ரயில் நிலையம் வர உள்ள நிலையில் மதுரை ரயில் நிலையத்தில் இருந்தும் சிலர் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக ரயிலிலேயே பயணித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இப்போராட்டம் காரணமாக திருப்பரங்குன்றம் ரயில் நிலைய பகுதியில் சிறிது நேரம் பதற்றமும் கடும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பத்து பெண்கள் உட்பட 40 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்




