• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

கந்துவட்டி கொடுமையால் உயிரிழந்த பெண்ணின் உறவினர் கதறல்..,

ByKalamegam Viswanathan

Jul 22, 2026

மதுரை மாநகர் செல்லூர் கீழத்தோப்பு பகுதியைச் சேர்ந்த ராஜாராம், மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் சுமை தூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பிரேமா. இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகளும் ஒரு ஆண் பிள்ளையும் உள்ளனர்.

கடந்த 2021-ஆம் ஆண்டு மூத்த மகளின் திருமணச் செலவிற்காக, பிரேமா சிக்கந்தர் சாவடியைச் சேர்ந்த கலையரசியிடம் 2 லட்சம் ரூபாய் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. அந்தக் கடனுக்கு மாதம் 20 ஆயிரம் ரூபாய் வட்டி கேட்டு தொடர்ந்து நெருக்கடி கொடுத்ததாகவும், மேலும், திருப்பதி, பகவதி, அங்கம்மாள் மற்றும் ஆகியோரின் பெயரிலும் கூடுதல் கடன் வாங்கி கொடுத்துவிட்டு அதற்கு கூடுதல் வட்டி கேட்டுள்ளார். இதையடுத்து கடந்த ஜூலை 13-ஆம் தேதி புது மண்டபம் அருகே பிரேமாவை வரவழைத்து, தகாத வார்த்தைகளால் திட்டி, வட்டி தொகையை உடனடியாக தராவிட்டால் ஆடையை கலைந்துவிட்டுவிடுவேன், உயிருடன் விடமாட்டோம் என மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான பிரேமா, வீட்டில் மூட்டைப்பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில் பிரேமாவின் உயிரிழப்புக்கு காரணமானவர்களை அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, அரசு இராஜாஜி மருத்துவமனை சாலையில் அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைய செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து பிரேமாவின் கணவர் ராஜாராம் அளித்த புகாரின் அடிப்படையில், திருப்பதி, கலையரசி, பகவதி மற்றும் அங்கம்மாள் ஆகிய 4 பேர் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் பிரிவு மற்றும் கந்துவட்டி சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விளக்குத்தூண் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து பேசிய பிரேமாவின் கணவர் மற்றும் உறவினர்கள் :

2 லட்சம் கடனுக்கு மாதம் 20 ஆயிரம் ரூபாய் வட்டி கேட்டு டார்ச்சர் பண்ணியுள்ளனர். கலையரசி திருப்பதியிடம் 4% வட்டிக்கு வாங்கி அதனை 20 % வட்டி என கூறி பிரேமாவிற்கு வழங்கி தினசரி சம்பளத்தை பெற்றுள்ளார். நாங்க கஷ்டப்பட்டு உழைச்ச காசெல்லாம் வட்டில போச்சு 4 நாளா வட்டிகட்டாததுனால ஆபாசமாக பேசி சேலையை உருவிருவேன் என மிரட்டியதால் என் மனைவி விஷம் குடிச்சு செத்துட்டாங்க.. என் மனைவியின் தற்கொலைக்கு காரணமான நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். இல்லையென்றால் மீண்டும் போராட்டம் நடத்துவோம் என்றார்

பிரேமாவின் உறவினர் பெண் ஜெயா பேசியபோது :

மீனாட்சியம்மன் கோவிலை சுற்றி மீட்டர் வட்டி கொடுக்குறாங்க அதனால அங்குள்ள தொழிலாளர்களும் மீட்டர் வட்டிக்கு வாங்கி நாள்தோறும் சொல்ல முடியாத துயரத்தில் இருக்கிறாங்க

எனது அண்ணன் மனைவி பிரேமா வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட தனது சம்பளத்தை எல்லாம் கொடுத்துவிட்டு சாப்பிடாமல் கூட குடும்பத்தோடு பசியோடு இருந்து வந்தார்கள்

விஜய்க்கு ஓட்டு போடணும்னு தேர்தல் நேரத்தில் சொல்லிக்கிட்டே இருந்தாங்க விஜய் ஆட்சிக்கு வந்ததை பார்த்து சந்தோஷமா இருக்கணும்னு நினைச்சாங்க ; பிள்ளைகளுக்கு தாய் மாமன் என விஜய் சொன்னதுனால கந்துவட்டியால பாதிக்கப்பட்ட என் அண்ணன் புள்ளைங்கல பாதுகாக்கனும், அம்மா இழந்து தெருவுல நிக்கிறாங்க தாய்மாமன்னு சொன்ன முதலமைச்சர் அவங்கள காப்பாத்தணும் கந்துவட்டி தொல்லையிலிருந்து எல்லா மக்களையும் பாதுகாக்கணும்

கந்து வெட்டி கேட்டு கலையரசி, திருப்பதி உள்ளிட்டோர் தொடர்ந்து மிரட்டல் விடுத்ததால் 3 மாசமாக வீட்ல சமைக்காம பட்டினியாவே இருந்தாங்க, வட்டிக்கு மேல வட்டி கேட்டதுனால எனது அண்ணன் மனைவி பிரேமா விஷமருந்தி உயிரிழந்து விட்டார்

இப்போது வாடகை கூட கட்ட முடியாமல் குடும்பமே தவித்து நிற்கிறது உணவுக்கு கூட வழி இல்லை காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அரசு எங்களது குடும்பத்தினர் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்