மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள அச்சம்பட்டி கிராமத்தில் கடந்த மூன்று மாதங்களாக குடிநீர் விநியோகம் சீராக இல்லாததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அச்சம்பட்டி கிழக்குத் தெரு பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இது குறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை நேரில் சென்று புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால், அப்பகுதி மக்கள் ஒரு குடம் தண்ணீரை 15 ரூபாய் என விலை கொடுத்து வாங்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
குடிநீர் தட்டுப்பாட்டினால் பள்ளி மாணவர்கள் சரியான நேரத்திற்குப் பள்ளிக்குச் செல்ல முடியாமலும், வேலைக்குச் செல்லும் பொதுமக்கள் தங்கள் பணிக்கு உரிய நேரத்திற்குச் செல்ல முடியாமலும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
அன்றாடத் தேவைகளுக்கே தண்ணீர் கிடைக்காததால், பொறுமையிழந்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் இன்று காலை அலங்காநல்லூர் – ஊமச்சிகுளம் சாலையில் காலி குடங்களுடன் அமர்ந்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அலங்காநல்லூர் காவல்துறையினர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பள்ளி மாணவர்களின் படிப்பு மற்றும் பொதுமக்களின் பணி பாதிப்பைக் கருத்தில் கொண்டு போராட்டத்தைக் கைவிடுமாறு கேட்டுக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து,
உடனடியாகக் குடிநீர் விநியோகம் சீரமைக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். அதிகாரிகளின் உறுதிமொழியை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள், மறியல் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.
மூன்று மாதங்களாக நீடிக்கும் இந்த குடிநீர் தட்டுப்பாட்டிற்கு தற்காலிகத் தீர்வு காண்பதுடன், இப்பகுதியில் நிரந்தரமான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.




