• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

தோப்பூர் கரடிக்கல சாலையில் வைகை கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு..,

ByKalamegam Viswanathan

Jul 17, 2026

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உச்சபட்டி முகாமிலிருந்து எய்ம்ஸ் செல்லக்கூடிய தோப்பூர் – கரடிக்கல் சாலையில் புதிதாக மின்கம்பம் அமைப்பதற்காக நேற்று மதியம் மின் வாரிய ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதில் முகாம் அருகே பள்ளம் தோண்டிய போது அவ்வழியாக உச்சப்பட்டி அகதிகள் முகாம் மற்றும் தோப்பூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லும் வைகை கூட்டு குடிநீர் திட்டகுழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் தண்ணீர் பீறிட்டு வெளியேறியது. தண்ணீர் அதிகமாக வெளியேறியதால் மின் வாரிய ஊழியர்கள் அந்த இடத்தை விட்டு விட்டு அருகில் பள்ளம் தோண்டி மின்கம்பத்தை மூடி சென்றனர்.

குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாவதை கண்டு கொள்ளாமல் மின்வாரிய ஊழியர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றதாக தெரிவித்த அப்பகுதி மக்கள் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் கடந்த 24 மணி நேரத்திற்கு மேலாக வைகை கூட்டு குடிநீர் திட்ட குழாயிலிருந்து பல லட்சம் லிட்டர் குடிதண்ணீர் வீணாக செல்கிறது. வெயில் காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வரும் நிலையில் கடந்த 24 மணி நேரமாக வீணாகும் தண்ணீரை தடுத்து நிறுத்த எந்த அதிகாரிகளும் முயற்சிக்கவில்லை என இப்பகுதி சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இது குறித்து குடிநீர் வாரிய அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டால் சம்பந்தப்பட்ட எண் உபயோகத்தில் இல்லை என வருவதாகவும் தண்ணீர் வீணாகி சாலையில் அரிப்பு ஏற்பட்டு அவ்வழியாக வரக்கூடிய வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளதாகவும் எனவே உடனடியாக நடவடிக்கை எடுத்து குடிநீர் வீணாவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.