கோவை மாவட்டம் மாவூத்தம்பதி ஊராட்சிக்கு உட்பட்ட சின்னாம்பதி பழங்குடி கிராம அருகே இன்று காலை திடீரென ஒற்றை காட்டு யானை புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் விவசாயி ஒருவர் உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுபதி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி நடராஜ் (72) இன்று காலை வழக்கம்போல் அவரது தோட்டத்தில் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, தோட்டத்தில் நுழைந்த காட்டு யானை அவரை திடீரென தாக்கியது. இதில் அவர் பலத்த காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் கீழே விழுந்தார்.
இதனை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கும், 108 ஆம்புலன்ஸ் சேவைக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து நடராஜின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த சம்பவத்தையடுத்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டு, கிராமப்புற பகுதிகளில் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காட்டு யானை நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.




