ஸ்ரீவில்லிபுத்தூர்: தமிழ்நாடு ஓய்வு பெற்ற காவல்துறையினர் நலச்சங்கத்தின் சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற சிறப்பு விழாவில், பாண்டியர் செங்கோல் மற்றும் பாண்டியர்களின் அரச அடையாளமான மீன் சின்னம் பொதுமக்கள் மற்றும் ஓய்வு பெற்ற காவல்துறையினரின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டது.

இந்நிகழ்விற்கு தலைமை தாங்கிய மேனாள் தடயவியல் இயக்குநர் செ. விஜயகுமார் அவர்கள், பாண்டியர் செங்கோலையும் மீன் சின்னத்தையும் பொதுமக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தி, அவற்றின் வரலாற்றுப் பெருமையை எடுத்துரைக்கும் வகையில் அனைவரது முன்னிலையிலும் காட்சிப்படுத்தினார்.
இந்த நிகழ்வில் பாண்டியர்கள் தேடி பயணம் வரலாற்று ஆய்வுக் குழுவின் தலைமை ஆய்வாளர் சு. மணிகண்டன் மற்றும் ஆய்வுக் குழு உறுப்பினர் கருப்பசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் பேசிய தலைமை ஆய்வாளர் சு. மணிகண்டன், “பாண்டியர்களின் அரச மரபு, செங்கோல் மற்றும் இரட்டை மீன் சின்னம் ஆகியவை தமிழர் நாகரிகத்தின் முக்கிய அடையாளங்களாகும். பல நூற்றாண்டுகளாக உலக வரலாற்றில் தனித்த இடம்பிடித்த பாண்டிய அரசின் பெருமை, இன்றைய தலைமுறையினருக்கு முழுமையாக சென்றடையவில்லை. எனவே, பல்வேறு சமூக, கல்வி மற்றும் பொதுநிகழ்வுகளில் பங்கேற்று பாண்டியர் வரலாறு, அவர்களின் ஆட்சிமுறை, செங்கோல் மற்றும் மீன் சின்னத்தின் வரலாற்று முக்கியத்துவம் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
வரலாற்று ஆதாரங்களின் அடிப்படையில் பாண்டிய நாகரிகத்தின் பெருமையை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே எங்களின் நோக்கம். விரைவில் பாண்டியர் வரலாறும், அவர்களின் அரச அடையாளங்களும் மக்கள் மனதில் ஆழமாகப் பதியும் வகையில் மாநிலம் முழுவதும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம்,” என்றார்.




