புதுக்கோட்டையில் முத்து கல்வி அறக்கட்டளையின் சார்பில் கல்வி பயின்று தனித்தேர்வு பெற்று பலரும் அரசுப் பணிக்குச் சென்றிருக்கிறார்கள். இந்நிலையில் இந்த அறக்கட்டளை உருவாகக் காரணமாக இருந்தவரும் அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் நிறுவனருமான ஆசிரியர் முத்து அவர்கள் மறைவுற்று எட்டாண்டுகள் ஆனதை முன்னிட்டு அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் சார்பில் அவருக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் இந்த இயக்கத்தின் மாநிலத் தலைவர் இளமுருகு முத்து கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியதோடு இந்த ஆண்டு அறக்கட்டளையில் தனிப் பயிற்சி இலவசமாகக் கற்றுக் கொண்டு காவல்துறைக்குத் தேர்வான ஒன்பது பேருக்கு புத்தகங்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்து அனுப்பி வைத்தார்.
நிகழ்வில் மேலும் மாநிலச் செயலாளர் ஆசிரியர் மெய்யர், மாவட்டத் துணைச் செயலாளர் லோகநாதன், மாவட்டச் செயலாளர் சுப்புநாதன், மாவட்ட இணைச் செயலாளர் நாகராசன், ஒன்றியச் செயலாளர்கள் சேகர், பழனியாண்டி, தங்கப்பன், கே.நாகராசன், மணிமுத்து, மாவட்ட தொழிற்சங்க அணிச் செயலாளர் மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

காவல்துறைப் பணிக்குத் தேர்வான தொண்டைமான்ஊரணி விக்னேஷ், வாகவாசல் பிரகாஷ், கறம்பக்குடி வினோத், கம்மங்காடு மாலினி, புதுக்கோட்டை திருப்பதி, கோகுல், மேட்டுப்பட்டி சந்திரதேவி, புத்தாம்பூர் உமாசந்திரன், செம்பட்டிவிடுதி மாதவன் ஆகிய ஒன்பது பேருக்கும் புத்தகங்கள் வழங்கி கவுரவிக்கப் பட்டனர்.
இது குறித்து அம்பேத்கர் மக்கள் இயக்க மாநிலத் தலைவர் இளமுருகு முத்து கூறுகையில் எனது தந்தையார் முத்து அவர்கள் மாவட்டம் முழுவதும் அறியப் பட்டவராக இருந்தார்.
இந்த மாவட்டத்தில் நடைபெற்று வந்த சாதீய மத மோதல்கள் இருந்தபோது அவற்றைத் தடுத்து நிறுத்திய பண்பாளர். அனைத்து மக்களும் ஒற்றுமையாக இருப்பதற்கு பல முன்னெடுப்புகளை எடுத்துச் செயல் படுத்தியவர். பலரும் பிரச்சினைகளை உருவாக்கிக் கொண்டிருந்தவர்கள் மத்தியில் பல பிரச்சினைகளையும் தீர்த்து வைத்த பெருமைகளுக்குச் சொந்தக்காரர். அனைத்து சமுதாயத்தையும் அரவணைத்து அவர் சென்றதைப் போலவே அனைத்து சமுதாயத்தினரும் அப்பாவை அரவணைத்துச் சென்றார்கள் என்ற அளவுக்கு சிறந்த பண்பாளராக இருந்து வந்தார். அதனால்தான் சமூக நல்லிணக்க நாயகர் போன்ற விருதுகளை அவர் பெற்றார்.

அவர் முழுநேர அரசியல்வாதி இல்லை. ஆசிரியர் பணியோடு மக்கள் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். அதனால்தான் அப்பாவின் அந்தப் பணி அவரோடு நின்று விடக் கூடாது என்பதற்காக டாக்டர் க.முத்து கல்விக்கழகம் என்ற நிறுவனத்தைத் தொடங்கி தொடர்ந்து நடத்தி வருகின்றோம்.
இந்தக் கல்விக் கழகத்தின் முக்கிய நோக்கமே சமுதாயத்தை முன்னேற்றுவதுதான். குறிப்பாக கல்விக்கு ஏங்கும் கிராமப்புற ஏழை மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்குக் கல்வி கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதற்காக முற்றிலும் இலவசமாகப் பயிற்சி அளித்து வருகிறோம்.

கல்விகூட இப்போது எல்லா இடங்களிலும் கிடைக்கிறது. ஆனால் வேலை வாய்ப்புதான் இப்போது குதிரைக் கொம்பாக இருக்கிறது. அதைப் பூர்த்தி செய்யும் விதமாகத்தான் எங்களது கல்விக் கழகத்தில் பயிற்சியளித்து அரசுப் பணிக்கு அனுப்பி வருகிறோம். குறிப்பாக கிராமப் புறங்களில் இருந்து வரும் ஏழை எளிய மாணவர்கள் தங்களை சமூகத்திலும் வாழ்க்கைத் தரத்திலும் முன்னேற்றிக் கொள்ள அவர்களுக்குக் கிடைக்கும் அரசுப் பணிதான் அடித்தளமாக அமையும். அதைத்தான் எங்களது கல்விக் கழகம் செய்து வருகிறது. இந்த ஆண்டு காவல்துறைக்கு மட்டும் ஆண்கள் பெண்கள் என ஒன்பது பேர் தேர்வாகி இருக்கிறார்கள் என்பது டாக்டர் க.முத்துவின் கனவை, லட்சியத்தை நிறைவேற்றியிருக்கிறோம் என்பதில் முழு திருப்தி. ஆண்டுதோறும் 40முதல் ஐம்பதுபேர் அரசுப்பணிகளுக்குச் சென்றிருக்கிறார்கள் என்றார்.



