மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே பிறந்து சில தினங்களே ஆன ஆண் குழந்தை குப்பைத்தொட்டியில் உயிருடன் கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே உள்ள ஆசாத் தெருவில் அமைந்துள்ள குப்பைத்தொட்டியில் குழந்தை அழும் சத்தம் கேட்டதைத் தொடர்ந்து, அப்பகுதி மக்கள் சென்று பார்த்தபோது பிறந்து சில தினங்களே ஆன ஆண் குழந்தை உயிருடன் கிடந்தது தெரியவந்தது. உடனடியாக அவர்கள் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் குழந்தையை மீட்டு, சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்று குழந்தைகள் நலப் பிரிவில் அனுமதித்தனர். குழந்தைக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மதிச்சியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குழந்தையை குப்பைத்தொட்டியில் வீசிச் சென்றது யார், அதற்கான காரணம் என்ன என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



