செங்கல்பட்டு வடக்கு மாவட்ட மதிமுக சார்பில், குரோம்பேட்டை அடுத்த திருநீர்மலை பகுதியில் நிலத்தடி நீர் பாதுகாப்பை வலியுறுத்தி சீமைக் கருவேல மரங்களை அகற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டு, மரம் அறுக்கும் இயந்திரம் மூலம் சீமைக் கருவேல மரங்களை அகற்றி பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, சீமைக் கருவேல மரங்கள் நிலத்தடி நீரை அதிகளவில் உறிஞ்சி இயற்கை வளங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்றார். கடந்த 2015-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இந்த மரத்தை “பிசாசு மரம்” என்று குறிப்பிட்டதை நினைவுகூர்ந்த அவர், இந்த மரம் வளர்ந்துள்ள பகுதிகளில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்தார்.
தமிழகத்தின் 12 மாவட்டங்களில் நேரடியாக சென்று சீமைக் கருவேல மரங்களை வேரோடு அகற்றும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும், தமிழகத்திலேயே ராமநாதபுரம் மாவட்டத்தில்தான் அதிகளவில் சீமைக் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளதாகவும், அதுவே மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டம் என்றும் வைகோ கூறினார்.

மேலும், மேகதாது அணை கட்டப்படக் கூடாது என்று முதன்முதலில் குரல் கொடுத்தவன் நான் என்றும், அந்த அணை கட்டப்பட்டால் தமிழகத்தின் 25 மாவட்டங்கள் பாதிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார். இந்த விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்திற்கு எதிராக செயல்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.

சமீபத்தில் நடைபெற்ற அம்மோனியா வாயு கசிவு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த வைகோ, இந்த சம்பவம் குறித்து தமிழக அரசு உண்மை அறியும் குழுவை அமைத்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
உலக மழைக்காடுகள் தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்திய வைகோ, இன்று பிறந்தநாள் காணும் தமிழக முதலமைச்சர் விஜய்க்கு தொலைபேசி மூலம் தனது வாழ்த்துகளை தெரிவித்ததாகவும் கூறினார்.




