இன்று உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டன. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் அதே கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டன. திருவரங்குளம் ஊராட்சியில் நடத்தப்பட்ட கிராம சபை கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா கலந்துகொண்டு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்து பேசினார்.

பின்னர் திருவரங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட மினி விளையாட்டு அரங்கம் அருகில் உள்ள நிலத்தில் 500 மரக்கன்றுகளை ஒரே நேரத்தில் நடும் நிகழ்வு நடைபெற்றது. அதற்காக இன்று காலை பொக்லின் வண்டியை வைத்து 500 குழிகள் தோண்டப்பட்டன. மேலும் பல்வேறு வகையான மரக்கன்றுகளும் ஒரே இடத்தில் வளரும் விதத்தில் 500 மரக்கன்றுகளும் கொண்டுவரப்பட்டன.

ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் கிராம சபை கூட்டத்தை முடித்துக் கொண்டு வந்த மாவட்ட ஆட்சியர் அருணா இந்த மரக்கன்றுகள் நடும் நிகழ்வையும் தொடங்கி வைத்தார். அவர் ஒரு மரக்கன்று நட்டு வைத்து தண்ணீர் ஊற்ற அதே நேரத்தில் அந்த கிராமத்து பெண்கள் திரண்டு வந்து எல்லோரும் மரக்கன்றுகளை நட்டனர்.
இது குறித்து இப்பகுதியில் உள்ள திமுகவினர் கூறுகையில் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை வந்த அமைச்சர்களில் சட்டமன்ற உறுப்பினர்களின் முன்னாள் அமைச்சர் சிவ.வீ. மெய்ய நாதன் ஒருவர் தான் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தார். அவர் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்தபோது இந்த தொகுதிக்குள் இலட்சகணக்கான மரக்கன்றுகளை நடவு செய்ய வைத்தார். அவர் கலந்து கொள்ளும் எந்த ஒரு நிகழ்வாக இருந்தாலும் அந்த இடத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடக்கும். அதேபோல் குறுங்காடுகள் அமைத்ததும் அவர் அமைச்சராக இருந்தபோதுதான். அவர் அந்தத் துறையை விட்டு வேறு துறைக்கு மாற்றப்பட்ட பிறகும் மரக்கன்றுகள் வளர்ப்பது குறித்து அவர் பேசாத நாளில்லை.
அவர் மரக்கன்றுகள் நடாத இடமும் இல்லை. ஆலங்குடி தொகுதி புதுக்கோட்டை மாவட்டம் தாண்டி தமிழ்நாடு முழுவதும் கோடிக்கணக்கான மரக்கன்றுகளை நடவு செய்ய வைத்தார்.

இந்த நிலையில் இப்போது ஆட்சி மாற்றம் வந்த பிறகும் கூட தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் என்ற வகையிலும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக தொடர்ந்து வலியுறுத்தி வந்திருப்பவர் என்ற வகையிலும் இந்த மரக்கன்று நடும் விழாவிற்கு அதிகாரிகள் அவரை அழைத்து இருக்க வேண்டும். பொதுவாக எந்த ஒரு அரசு நிகழ்ச்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சி எம்எல்ஏவாக இருந்தாலும் கூட தொகுதியின் எம்எல்ஏவுக்கு அழைப்பு வரும். அவரது பெயர் அழைப்பிதழ்களில் இடம்பெறும். அரசின் விதிமுறைப்படி அதுதான் நடக்கும்.
ஆனால் இப்போது உள்ள அதிகாரிகள் யாருக்கு பயந்து, எதற்கு பயந்து இவ்வாறு செய்தார்கள் என்று தெரியவில்லை. ஆனாலும் முன்னாள் அமைச்சர் என்ற வகையிலும் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் என்ற வகையிலும் அழைத்திருக்க வேண்டும். ஏன் இவ்வாறு செய்தார்கள் என்று புரியவில்லை என்று தங்களது வருத்தத்தை தெரிவித்தனர்.




