கோவை மாநகர காவல் துறை, வாக்ரூ அறக்கட்டளை மற்றும் மகிழ்வி அறக்கட்டளை ஆகியவை இணைந்து மாணவர்களின் ஒழுக்கம், தலைமைத்திறன் மற்றும் தனித்திறன் மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு “போலீஸ் கிளப்” அமைப்பின் தொடக்க விழாவை இன்று வெள்ளலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடத்தினர்.

இந்நிகழ்ச்சி போத்தனூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் அசோக் குமார் தலைமையில் நடைபெற்றது. வெள்ளலூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முன்னிலை வகித்தார். மேலும் வாக்ரூ அறக்கட்டளை மற்றும் மகிழ்வி அறக்கட்டளையின் நிர்வாகிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் “போலீஸ் கிளப்” அமைப்பின் நோக்கம், செயல்பாடுகள் மற்றும் மாணவர்களுக்கு கிடைக்கும் பயன்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. மாணவர்களை நல்லொழுக்கம் மிக்க, பொறுப்புணர்வுடைய, சமூக அக்கறை கொண்ட மற்றும் தன்னம்பிக்கை நிறைந்த இளைஞர்களாக உருவாக்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
போலீஸ் கிளப் மூலம் மாணவர்களின் கல்வி, உடல், மன மற்றும் சமூக வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் பல்வேறு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. இதில் ஒழுக்கம், நேர மேலாண்மை, தலைமைத்திறன், தன்னம்பிக்கை வளர்ப்பு, மேடைப் பேச்சு, தகவல் தொடர்புத் திறன், குழு ஒருங்கிணைப்பு, சமூகப் பொறுப்புணர்வு, தேசப்பற்று, சட்ட விழிப்புணர்வு மற்றும் நல்ல குடிமகன் பண்புகள் குறித்து பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
மேலும் மாணவர்களின் உடல் ஆரோக்கியம் மற்றும் தற்காப்புத் திறனை மேம்படுத்தும் வகையில் கராத்தே, சிலம்பம், உடற்பயிற்சி, வாலிபால், கரம், செஸ் உள்ளிட்ட விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. அறிவுத்திறனை வளர்க்கும் நோக்கில் வேத கணிதம், நினைவாற்றல் மேம்பாட்டு பயிற்சி, கணித திறன் வளர்ப்பு மற்றும் ஆளுமை மேம்பாட்டு வகுப்புகளும் நடத்தப்படுகின்றன.

கல்வியில் பின்தங்கிய மாணவர்களுக்கு தனிப்பட்ட வழிகாட்டுதல், போட்டித் தேர்வுகளுக்கான அடிப்படை பயிற்சி, ஆங்கிலப் பேச்சுத்திறன் மேம்பாடு, கணினி அறிவு மற்றும் தொழில்நுட்ப விழிப்புணர்வு தொடர்பான வகுப்புகளும் ஏற்பாடு செய்யப்படுகின்றன. மாணவர்கள் போதைப்பொருள், தீய பழக்கவழக்கங்கள் மற்றும் சமூகச் சீர்கேடுகளிலிருந்து விலகி, தன்னம்பிக்கையுடனும் சமூக அக்கறையுடனும் சிறந்த இளைஞர்களாக உருவாக வேண்டும் என்ற நோக்கில் இப்பயிற்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
வாரத்தில் ஆறு நாட்கள் பள்ளி முடிந்த பின் மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை இப்பயிற்சிகள் தொடர்ந்து வழங்கப்பட உள்ளன. மகிழ்வி அறக்கட்டளை சார்பில் திறமையான மற்றும் அனுபவமிக்க பயிற்றுவிப்பாளர்கள் மூலம் மாணவர்களுக்கு தரமான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
மேலும் மாணவர்களின் உடல்நலத்தை கருத்தில் கொண்டு பயிற்சி நேரங்களில் வேகவைத்த பயிறு வகைகள், முளைகட்டிய பயிறு, முட்டை உள்ளிட்ட சத்துணவுகள் வழங்கப்பட உள்ளன. இதனுடன் சிறப்பு பயிற்சியாக வேத கணிதம் உள்ளிட்ட கல்வி மேம்பாட்டு வகுப்புகளும் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள் என்ற நோக்கில், கல்வியுடன் ஒழுக்கம், தலைமைத்திறன், சமூகப் பொறுப்புணர்வு மற்றும் உடல் நலனை மேம்படுத்தும் வகையில் போலீஸ் கிளப் செயல்பட உள்ளதாகவும், இதன் மூலம் மாணவர்கள் நல்ல குடிமக்களாகவும், எதிர்கால சமூகத் தலைவர்களாகவும் உருவாக்கப்படுவார்கள் என நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.




