கோவை புறநகர்ப் பகுதிகளான துடியலூர், வடமதுரை, மற்றும் தடாகம் சாலை உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை திடீரென வீசிய சூறாவளிக் காற்று மற்றும் பலத்த மழையின் காரணமாகப் பல இடங்களில் கடைகளின் மேற்கூரைகள் காற்றில் பறந்தன. மேலும் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தது.

கோடைக் காலம் முடிந்து தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்பட்டு வரும் நிலையில், கோவையின் பல்வேறு பகுதிகளில் நேற்று பிற்பகலுக்கு மேல் வானிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது. மாலை நேரத்தில் கருகருவென மேகங்கள் சூழ்ந்து, யாரும் எதிர்பாராத விதமாகப் பயங்கர சத்தத்துடன் சூறாவளிக் காற்று வீசத் தொடங்கியது.
துடியலூர் & வடமதுரை: துடியலூர் மற்றும் தடாகம் பிரதான சாலைப் பகுதிகளில் வீசிய அதிரடிச் சூறாவளிக் காற்றின் வேகத்திற்குத் தாளாமல், சாலையோரம் இருந்த வணிக வளாகங்கள் மற்றும் தற்காலிகக் கடைகளின் மேற்கூரைகளான தகர ஷீட்டுகள் (Asbestos & Tin Sheets) அப்படியே பெயர்ந்து காற்றில் தூக்கி வீசப்பட்டன.
திடீரெனப் பறந்து வந்த கூரைகளைக் கண்டு அப்பகுதியினர் அலறி அடித்துக் கொண்டு பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர்.

தடாகம் சாலைப் பகுதியில் காற்றின் வேகம் மிகக் கொடூரமாக இருந்ததால், மரங்கள் வேரோடு சாய்ந்து சில இடங்களில் மின் கம்பங்களும் சாய்ந்து இருளில் மூழ்கியது.
அதனைத் தொடர்ந்து, மின்வாரிய ஊழியர்கள் போர்க்கால அடிப்படையில் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு மின் விநியோகத்தை மீட்டெடுத்தனர்.
நேற்று வீசிய இந்தத் திடீர் சூறாவளித் தாக்குதலால் கோவையின் வடக்கு புறநகர்ப் பகுதிகள் பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.



