மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அவனியாபுரம் அருகே உள்ள மாநகராட்சி உட்பட்ட 100வது வார்டு ஜே ஜே நகர் பகுதியில் 3000 திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

இந்த நிலையில் மக்கள் அப்பகுதியில் அடிப்படை வசதி இல்லாமல் அவதி அடைந்து வந்த நிலையில் அந்த மக்களின் நீண்ட போராட்டத்திற்கு பிறகு தார் சாலை அமைக்கப்பட்டது. அதுவும் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பாக பாதாள சாக்கடை அமைப்பதற்காக சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் தோண்டப்பட்டு பின்னர் பணிகள் கிடப்பில் போடப்பட்டன. இதனால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்த நிலையில் அப்பகுதி மக்கள் கவுன்சிலர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த மக்கள் இன்று மதுரை சர்வதேச விமான நிலையம் செல்லும் சாலையில் நடுவே அமர்ந்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த இடமே பரபரப்பானது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அவனியாபுரம் போலீசார் மற்றும் அவனியாபுரம் மாநகராட்சி உதவி பொறியாளர் மற்றும் கவுன்சிலர் ஆகியோர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி 10 நாட்களுக்குள் உரிய தீர்வு எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் மக்கள் கலைந்து சென்றனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் பேசும் போது
ஆறு மாதங்களுக்கு மேலாகி சாலை குண்டு குளியுமாக உள்ளது. குடிநீர் வசதி, சாலை வசதி,தெரு விளக்கு வசதி, மின்சார வசதி இல்லை இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை மூன்று முறைக்கு மேல் சாலை மறியல் போராட்டத்திற்கு பின்னரே சாலை அமைக்கப்பட்டது. பத்து நாட்களுக்குள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்கள் இல்லையில் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுப்போம் என்று எச்சரித்தனர்.



