திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் போட்டியிட்டு சுமார் 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சட்டத்துறை மற்றும் மின்சார துறை அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் வாக்களித்து வெற்றி பெற செய்த தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்.

அந்த வகையில் இன்று விளாச்சேரி மந்தை, காந்தி தெரு, மூனாண் பட்டி, தோப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று மக்களுக்கு நன்றி தெரிவித்தார். விளாச்சேரியில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்த அமைச்சருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து குழந்தைகளை கையில் தூக்கியும் சிறுவர்களிடம் புகைப்படம் எடுத்தும் கொண்டார்.

தொடர்ந்து அவர் பேசும்போது: சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த 11 கல் குவாரிகள் ஒரே நாளில் மூடப்பட்டுள்ளது தொடர்ந்து இது நடக்கும். திருப்பரங்குன்றம் தொகுதியில் தேவையில்லாத மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளன திருப்பரங்குன்றத்தில் கிரிவலப் பாதையில் உள்ள அனைத்து மது கடைகளும் அடைக்கப்பட்டன. இது மக்களுக்கான அரசு உங்கள் ஆசிர்வாதத்துடன் முதலமைச்சர் விஜய் சிறப்பாக முப்பது வருடத்திற்கு மக்களுக்கான அரசாக இது இருக்கும். அலுவலகம் திறந்தாச்சு வீடும் பார்த்து விட்டு வாரத்திற்கு மூன்று நாள் இங்குதான் இருப்பேன் எதுவானாலும் என்னை வந்து சந்தியுங்கள் விசேஷத்திற்கு பத்திரிக்கை வையுங்கள் அடிக்கடி வருவேன் என்றார். தொடர்ந்து விளாச்சேரி கிராம இளைஞர்கள் மன்றம் சார்பில் விளாச்சேரி நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும்.

விளாச்சேரி மயானத்திற்கு மற்றும் அரசு கள்ளர் பள்ளிக்கு செல்லும் வழியில் உள்ள தரைப்பாளத்தை சரி செய்யவும் பொது கழிப்பிடம், பேவர் பிளாக் சாலை வசதி வேண்டி அமைச்சரிடம் மனு அளிக்கப்பட்டது.



