கோவை, ராமநாதபுரம் 80 அடி சாலை சர்ச் வீதியைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். இவருடைய மனைவி தமிழ்ச்செல்வி. இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். மகள் திருமணமாகி பெருந்துறையில் வசித்து வருகிறார். மகன் ஸ்ரீராம் அங்கு உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

கணவன் – மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக தமிழ்ச்செல்வியை கத்தியால் குத்தி ஜெயச்சந்திரன் கொலை செய்தார். இது தொடர்பாக ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெயச்சந்திரனை கைது செய்தனர். ஜெயச்சந்திரன் அளித்த வாக்குமூலம் குறித்து காவல்துறை அதிகாரிகள் கூறும் போது:-
ஜெயச்சந்திரனுக்கு குடிப்பழக்கம் இருந்தது. அவர் கடந்த 23 ம் தேதி மது குடித்து விட்டு மனைவி மற்றும் மகன் சாப்பிடுவதற்காக பிரியாணி வாங்கிச் சென்றார். அதை அவர்கள் சேர்ந்து சாப்பிட்டனர். பின்னர் மகன் வேலைக்கு சென்று விட்டான். இதை அடுத்து ஜெயச்சந்திரன் மது குடிப்பதை தமிழ்ச்செல்வி கண்டித்து உள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்தவர் வீட்டின் சமையல் அறையில் இருந்த காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து வந்து தமிழ்ச்செல்வியின் தொடையில் குத்தி உள்ளார்.

இதனால் தமிழ்ச்செல்வி வலியால் துடிப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் தனது மனைவியை தூக்கி ரத்தம் அதிகமாக வெளியே செல்கிறது மருத்துவமனைக்கு செல்லலாம் என்று அழைத்து உள்ளார். இதற்கு இடையே தமிழ்செல்வி ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். உடனே பயந்து போன ஜெயச்சந்திரன், தனது மகனுக்கு தொடர்பு கொண்டு அம்மாவை கத்தியால் குத்தி விட்டேன் என்று கூறி வீட்டுக்கு அழைத்து உள்ளார். இதனால் பதற்றம் அடைந்தவர் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்து விட்டு வீட்டுக்கு வந்தார். ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து பரிசோதனை செய்த போது தமிழ் செல்வி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிய வந்தது என்றும், இவ்வாறு வாக்குமூலம் அளித்ததாக காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.





