மதுரை மாநகராட்சிக்குட்பட்ட வெள்ளக்கல் குப்பை சேகரிப்பு மையத்தில் நிலவும் முறைகேடுகள் மற்றும் அப்பகுதி மக்களின் அவல நிலையை ஆய்வு செய்ய, மாநகராட்சி பொறுப்பு மேயர் நாகராஜன் இன்று நேரில் சென்று அதிரடி ஆய்வு மேற்கொண்டார்.

வெள்ளக்கல் குப்பை கிடங்கை ஒட்டியுள்ள பாம்பன் நகர் பகுதி மக்கள், கடுமையான துர்நாற்றம், ஈக்கள் மற்றும் தொற்றுநோய் அபாயம் காரணமாக வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர்.
ஆய்வின்போது, குப்பை மேலாண்மை பணிகளை மேற்கொண்டு வரும் தனியார் நிறுவனங்கள் விதிமுறைகளை மீறி செயல்படுவதாக மேயர் குற்றம்சாட்டினார். ‘அவர்லாண்ட்’ நிறுவனத்திற்கு ஒரு டன் குப்பைக்கு சுமார் ₹2,000 வழங்கப்பட்டும், அவர்கள் செய்ய வேண்டிய பணிகளுக்காக மற்றொரு நிறுவனத்திற்கு தினசரி ₹65 ஆயிரம் வரை மாநகராட்சி தனியாக பணம் வழங்கப்படுவது கேள்விக்குறி என தெரிவித்தார்.
மேலும், பல கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட குப்பை பிரிப்பு இயந்திரங்கள் செயல்படாமல் துருப்பிடித்து கிடப்பதாகவும், அதற்கு பதிலாக பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி தொழிலாளர்கள் மற்றும் குழந்தைகள் மூலம் ஆபத்தான முறையில் குப்பைகள் பிரிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.
குப்பை கிடங்கின் பாதுகாப்புச் சுவர் உடைக்கப்பட்டு, 150-க்கும் மேற்பட்டோர் உயிரைப் பணயம் வைத்து குப்பை பொறுக்கும் நிலை இருப்பதாகவும், அதிகாரிகளின் அலட்சியமே இதற்கு காரணம் என்றும் தெரிவித்தார்.

₹33.58 கோடி மதிப்பிலான நவீன குப்பை மேலாண்மை திட்டம் 2022-ல் தொடங்கப்பட்டும்,ஒப்பந்த காலம் இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே இருந்த நிலையில் 2026 ஆகியும் இன்னும் முழுமை பெறாதது குறித்து கேள்வி எழுப்பிய மேயர், ஒப்பந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், “நான் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மேயர் என்பதால் அதிகாரிகள் புறக்கணிக்கிறார்களா?” என வேதனை தெரிவித்த அவர்,
வெள்ளக்கல் குப்பை பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக குப்பைகளிலிருந்து மின்சாரம் மற்றும் பயோ கேஸ் தயாரிக்கும் நவீன திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என முதல்வருக்கு மதுரை பொறுப்பு மேயர் நாகராஜன் கோரிக்கை விடுத்தார்.





