• Thu. May 21st, 2026
WhatsAppImage2026-05-15at0006252
previous arrow
next arrow
Read Now

அதிமுக அலுவலகத்தை திறந்து விட கோரிக்கை- ஆட்சியர் அருணாவிடம் மனு..,

Byமுகமதி

May 21, 2026

புதுக்கோட்டையில் அதிமுக அலுவலகத்தை திறந்து விட கோரிக்கை வைத்து அதிமுக புதிய மாவட்ட செயலாளர் பழனிவேலு மாவட்ட ஆட்சியர் அருணாவிடம் மனு கொடுத்திருக்கிறார்.

அண்மையில் நடைபெற்று முடிந்த தேர்தல் முடிவுகளுக்கு பிறகு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் கட்சிக்கு எம்எல்ஏக்களின் ஆதரவு கொடுப்பது குறித்து அதிமுகவிற்குள் பிளவு ஏற்பட்டதை தொடர்ந்து பல்வேறு பொறுப்பாளர்கள் அவர்கள் வகித்து வந்த பொறுப்புகளில் இருந்து கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விடுவித்தார். அவ்வாறு விடுவித்ததோடு அந்த பொறுப்புகளுக்கு புதிய பொறுப்பாளர்களையும் உடனடியாக நியமித்தார்.

அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஏற்கனவே வடக்கு மாவட்டச் செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் தெற்கு மாவட்டச் செயலாளராக இருந்த உன்னால் எம்எல்ஏ வைரமுத்து ஆகியோர் அந்த பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டு புதிய ஒருங்கிணைந்த மாவட்டச் செயலாளராக பழனிவேலு நியமிக்கப்பட்டு இருக்கிறார். பொறுப்பு அறிவிக்கப்பட்டவுடன்
அவர் தலைமையில் அதிமுகவினர் ஊர்வலமாக வந்து அண்ணா சிலை எம்ஜிஆர் சிலை ஆகிய சிலைகளுக்கு மாலை அணிவித்ததோடு மாவட்ட கட்சி அலுவலகத்தையும் திறப்பதற்காக வந்த போது முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் அதை திறக்க விடாமல் முற்றுகையிட்டனர். அங்கே ஏதேனும் அசம்பாவிதம் நடந்துவிடும் என்பதற்காக காவல்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு காவலர்களை குவித்து வைத்து பிரச்சனை ஏதும் ஏற்படாத வண்ணம் தடுத்து நிறுத்தியது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிமுகவில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டிய எடப்பாடி பழனிசாமி பல்வேறு உத்தரவுகளை அவர்களுக்கு பிறப்பித்து இருக்கிறார்.
இந்த நிலையில் தான் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு புதிய மாவட்ட செயலாளராக ஆகியிருக்கும் பழனிவேலு இன்று தங்களது கட்சி அலுவலகத்தை திறந்து செயல்பட வைப்பதற்கு தங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையோடு ஆட்சியரை தனது ஆதரவாளர்களுடன் சென்று சந்தித்து மனு கொடுத்திருக்கிறார்.
இது குறித்து பழனிவேலு கூறுகையில் நான் இப்போது மாவட்ட செயலாளராக ஐயா எடப்பாடி பழனிசாமி அவர்களால் நியமிக்கப்பட்டிருக்கிறேன். நாங்கள் ஏற்கனவே கட்சியின் மாவட்ட அலுவலகத்தை திறக்க முயன்ற போது சட்டமன்ற பிரச்சனை ஏற்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்து அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுக்கச் சொல்லி வலியுறுத்தி எங்களது பொதுச் செயலாளர் சொன்னதால் இன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்திருக்கிறோம். மனுவும் கொடுத்திருக்கிறோம். அதில் கட்சியின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் அனைத்தும் கட்சியின் பொதுச் செயலாளரின் கட்டுப்பாட்டில் உள்ளது. அந்த வகையில் மாவட்ட அலுவலகமும் அவருக்குத்தான் சொந்தம். நான் புதிதாக மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டு இருப்பதால் கட்சியின் அலுவல்களை பார்ப்பதற்காக அனுமதித்து அலுவலகத்தை திறக்க வேண்டும் அதற்கு தாங்கள் உதவ வேண்டும் என்று கோரிக்கையை முன் வைத்திருக்கிறேன். அவரும் புதிதாக காவல் கண்காணிப்பாளராக அதிகாரி நியமிக்கப்பட்டிருக்கிறார். அவர் வந்து பொறுப்பேற்றுக் கொண்டவுடன் அவரிடம் சொல்லி சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கும் தாங்கள் அலுவலகம் செல்வதற்கும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்திருக்கிறார். மேலும் எங்களது கட்சி அலுவலகத்திற்கு நாங்கள் செல்வதற்கு யாரும் எந்த தடையும் விதிக்க முடியாது. கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் கட்சியின் அலுவலகத்திற்கு வந்து செல்லலாம் என்றார். அவருடன் அதிமுகவின் வர்த்தகப் பிரிவு மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் நெவளிநாதன், தலைமை கழக பேச்சாளர் சீனிவாசன், சேந்தன்குடி ஞான. கலைச்செல்வன் உள்ளிட்ட கட்சியின் தொண்டர்கள் இருந்தனர்.