புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்காலில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் உத்தரவுபடி மாதம்தோறும் 15ம் தேதி நடைபெறும் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் 2மாத இடைவெளி விட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் இஷிதா ராட்டி தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைத்தீர் முகாமில் வருவாய்த்துறை,மின்துறை, பொதுப்பணித்துறை,உள்ளாட்சி துறை,வேளாண்துறை,கல்வித்துறை உள்ளிட்ட அனைத்து துறை உயரதிகாரிகளும் கலந்து கொண்டு புகார் அளிக்கும் மக்களுக்கு உடனடி தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.இன்றைய பொதுமக்கள் குறைத்தீர் முகாமில் இலவச மனை பட்டா,முதியோர் உதவித்தொகை,விதவை மற்றும் முதிர்கன்னிகளுக்கான உதவி தொகை கேட்டு 40க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு தங்களது புகார்களை எழுத்துப்பூர்வமாக அளித்தனர்.

குறிப்பாக காரைக்காலில் சமீபத்தில் 20க்கும் மேற்பட்டோர் பல இடங்களில் தெரு நாய்களால் கடிபட்டு சிகிச்சை பெற்று வருவது குறித்து காரைக்கால் போராளிகள் குழு புகார் மனு அளித்தனர்.மேலும் ஆட்சியர் பொறுப்பேற்றது முதல் மாவட்ட அரசு பொது மருத்துமனை ஆய்வு மேற்கொள்ளாததை குறிப்பிட்டு அதனை ஆய்வு செய்யவும்,மனுவில் வலியுறுத்தினர்.புகார் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க ஆட்சியர் இஷிதா ராட்டி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர் இஷிதா ராட்டி கூறியதாவது: இன்றைய மக்கள் குறைதீர் முகாமில் கலந்து கொண்ட பெரும்பாலான மக்கள் இலவச மனைப்பட்டா,நில ஆக்ரமிப்பு மற்றும் நிலம் தொடர்பான தகராறு,குடும்ப தகராறு மற்றும் சாலை,குடிநீர்,மின்சார வசதி தொடர்பாக புகார்கள் அளித்தனர்.அந்த புகார்கள் மீது சம்பந்தப்பட்ட துறை உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாக தெரிவித்தார்.நகரில் தெரு நாய்கள் கடித்து மக்கள் பாதிப்பது அதிகரிப்பது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.நாய்கடிக்கான சிகிச்சை வசதிகள் அரசு மருத்துவமனையில் உள்ளது என்றும் கூறிய ஆட்சியர் இஷிதா ராட்டி,மக்கள் பாதிக்காது தெரு நாய்களை பிடித்து பாதுகாப்பாக அப்புறப்படுத்த நகராட்சி,கொம்யூன் ஆணையர்களுக்கு அறிவுறுத்தி உள்ளதாக தெரிவித்தார்.




