• Fri. May 15th, 2026
WhatsAppImage2026-05-15at0006252
previous arrow
next arrow
Read Now

விவசாய நிலங்களை அழித்து சோலார் பேனல் அமைப்பதற்கு எதிர்ப்பு..,

Byமுகமதி

May 15, 2026

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியம் கோபாலபுரம் பகுதியில் சுமார் நூறு ஏக்கர் பரப்பளவில் லூமேன் கிரிட் சோலார் எனர்ஜி பிரைவேட் நிறுவனம் என்ற பெயரில் ஒரு கம்பெனி அங்குள்ள விவசாய நிலங்களை விவசாயிகளிடமிருந்து விலைக்கு வாங்கி அந்த நிலத்தில் சோலார் பேனல்கள் அமைத்து வருகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மு.அருணாவிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்திருக்கிறார்கள். அதில் இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களை கிரயமாக இந்தக் கம்பெனி வாங்கி சோலார் பேனல்னகளை அமைத்து வருகிறார்கள். இதனால் விவசாய நிலங்கள் விவசாயம் செய்ய முடியாமல் போகின்றன என்பது ஒரு புறம் இருந்தாலும் அவர்களுக்கு நிலத்தை வழங்க மறுக்கும் விவசாயிகள் மிரட்டப் பட்டு அவர்களது நிலத்தையும் பறித்து இந்த சோலார் பேனல்களை அமைக்கிறார்கள்.

மேலும் வயல்கள் மட்டுமல்லாது நீர்வழிப்பாதைகளையும் சிதைத்து விட்டார்கள். அதனால் மற்ற நிலங்களுக்குப் போகும் நீர்வழிப்பாதையும் அடைக்கப் பட்டு விட்டது. அதனால் மற்ற விவசாயிகளும் விவசாயம் செய்ய முடியாமல் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர். இது அரசால் அறிவிக்கப்பட்ட பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலப் பகுதிக்குள் வருவதால் விவசாயத்திற்கு ஊறு விளைவிக்கும் எந்தத் தொழிலும் செய்யக் கூடாது என்பதும் சட்டமாகும்.

எனவே இப்பகுதியில் சோலார் பேனல் அமைப்பதால் கோபாலபுரம், பங்கையத்தான்குடி, கூம்பள்ளம், கம்பர்கோயில், திணையாகுடி, திருநெல்லிவயல், மாவிளங்காவயல், பிராமணவயல், கூத்தனூர், துண்டுக்காடு ஆகிய பகுதிகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் மனிதர்களுக்கு மட்டுமல்லாது மற்ற உயிரினங்களுக்கும் பாதிப்புகள் ஏற்படும் என்பதால் இதை அனுமதித்த வருவாய்த்துறை மற்றும் பத்திரப் பதிவுத்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுத்து எங்களது விவசாய நிலங்களைப் பாதுகாக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சிபிஐஎம் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினராகவும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் துணைச் செயலாளராகவும் இருக்கும் அறந்தாங்கி தென்றல் கருப்பையா கூறுகையில் லூமேன் கிரிட் சோலார் என்ற தனியார் நிறுவனம் கல்லணைக் கால்வாய்த் தண்ணீர் பாயும் பகுதிகளில் தினையாகுடி, கோபாலபுரம் பகுதிகளில் மக்களிடமிருந்து விவசாய நிலங்களை வாங்கி சோலார் சிஸ்டம் அமைப்பது முற்றிலும் விவசாய நிலங்களை அழிப்பதாகும்.

இந்தப் பகுதி வேளாண் மண்டலத்திற்குள் இருப்பதால் எந்தத் தொழிலும் விவசாய நிலங்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் விதமாக செய்யக் கூடாது என்பது தமிழக அரசால் இயற்றப் பட்ட சட்டமாகவே இருக்கிறது.

இப்படியொரு சட்ட இருப்பது நிச்சயமாக வருவாய்த்துறை மற்றும் பத்திரப் பதிவுத்துறை அலுவலர்களுக்கும் அதிகாரிகளுக்கும் தெரிந்துதான் இருக்கும். ஆனாலும் எதையும் கண்டு கொள்ளாமல் விவசாய நிலங்களின் அழிவுக்கு அதிகாரிகளும் துணைபோய் இருக்கிறார்கள். அதனால் இந்த நிறுவனத்தின் கட்டுமானப் பணிகளைத் தடுத்து நிறுத்துவதோடு இந்தக் கொடுஞ்செயலுக்குத் துணையாக இருக்கும் இரண்டு துறைகளின் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.