முருகப்பெருமானின் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு திருப்பரங்குன்றம் தொகுதி எம் எல் ஏ வாக தேர்ந்தெடுக்கப்பட்டவரும் தற்போதைய தவெக அமைச்சருமான சி டி ஆர் நிர்மல்குமார் அமைச்சராக பதவியேற்ற பின்னர் நேற்று முதல்முறையாக மதுரை வந்த அவர் விமான நிலையத்தில் இருந்து திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருகை தந்தார். வழக்கமாக பக்தர்கள் சாமி சுப்பிரமணியசுவாமி கோயில் நடை பகல் 1 மணிக்கு சாத்தப்பட்டு மீண்டும் மாலை 4 மணிக்கு திறக்கப்படும்.
1 மணிக்கு நடை சாத்தப்படுவதை முன்னிட்டு பகல் 12.45 மணிக்கெல்லாம் கோயிலுக்குள் உள்ள சில வாயில் கதவுகள் சாத்தப்படும் நடைமுறையும் உள்ளது.

ஆனால் நேற்று அமைச்சர் நிர்மல்குமார் சுப்பிரமணியசுவாமி கோயில் வாசலுக்கு பகல் 12.57 மணியளவில் வருகை தந்தார். அவரை வரவேற்க கோயில் துணை ஆணையர் ஞானசேகர், சிவாச்சாரியார்கள் மற்றும் அலுவலர்கள் அங்கு காத்திருந்தனர். பின்னர் வருகை தந்த அவர் கோயிலுக்குள் 1 மணிக்கு உள்ளே நுழைந்தார். அங்கு அவரை அறங்காவலர் சண்முகசுந்தரம், கோயில் அலுவலர்கள் மற்றும் கட்சியினர் சால்வை அணிவித்து வரவேற்றனர். அதனைத்தொடர்ந்து கோயில் சிவாச்சாரியார்கள் பூரண கும்ப மரியாதை வழங்கினர். பின்னர் கோயிலுக்குள் சென்ற அவர் 1 மணிக்கு பின்னர் மூலஸ்தானம் சென்று சாமி தரிசனம் செய்தார். அவருடன் ஏராளமான கட்சியினர் வருகை தந்ததால் ஏற்கனவே கோயிலுக்குள் இருந்த பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். பின்னர் அமைச்சர் நிர்மல் குமார் சாமி தரிசனம் செய்துவிட்டு 1.20 மணியளவில் கோயிலை விட்டு வெளியே கிளம்பினார்.
பொதுவாக 1 மணிக்கு நடை சாத்தப்பட்டு கோயில் முக்கிய நுழைவு வாசல் அடைக்கப்பட்டு மீண்டும் 4 மணிக்கு திறக்கப்படும் நிலையில் நேற்று அமைச்சருக்காக சுமார் 1 .30 மணியளவில் நடை சாத்தப்பட்டது பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பாக்ஸ் செய்தி
நல்ல மாற்றம் என் பக்தர்கள் புலம்பல்
இது குறித்து அங்கிருந்த பக்தர்கள் சிலர் சாமானியர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தந்தால் 12.45 மணிக்கு வெளியே விரட்டி விடும் கோயில் பணியாளர்கள் அமைச்சர் மற்றும் தவெக கட்சியினருக்காக நடைசாத்தும் நேரத்தையே மாற்றுகிறார்கள் நல்ல மாற்றம் என புலம்பி சென்றனர்.
கட்சி துண்டுடன் மூலஸ்தானம் வரை சென்ற கட்சி தொண்டர்கள் – பொதுவாக அரசியல் கட்சியினர் சாமி தரிசனம் செய்ய கோயிலுக்குள் வரும் போது கட்சி துண்டை அணிந்து செல்ல மாட்டார்கள் ஆனால் நேற்று அமைச்சருடன் வந்த த வெக வினர் பெரும்பாலானோர் கட்சி துண்டை அணிந்து மூலஸ்தானம் வரை வந்தது பலரையும் முகம் சுளிக்க வைத்தது.

தவெக தொண்டர்கள் சிலர் அமைச்சர் நிர்மல்குமார் மூலஸ்தானத்தில் சாமி தரிசனம் செய்ததை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்தனர். உடனடியாக அவர்களை அங்கிருந்த கோயில் பணியாளர்கள் புகைப்படம் எடுக்க கூடாது என அறிவுறுத்தியும் அதை அக்கட்சி தொண்டர்கள் கண்டுகொள்ளாமல் செல்போனில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்தனர்.




