வேடசந்தூர் அருகே லேசான சாரல் மழை பெய்தாலே ஊருக்குள் பள்ளி முன்பு சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள தண்ணீர்பந்தம்பட்டியில் இருந்து இ.சித்தூர் வழியாக நல்லமநாயக்கன்பட்டி, கரிசல்பட்டி வரை செல்லும் சாலை உள்ளது.

இதில் இ.சித்தூரில் லேசான மழை பெய்தாலும் சேதமடைந்து நிலையில் சாலையில் பள்ளமாக இருப்பதால் ஊருக்குள் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு சாலையில் குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்பதால் அந்த வழியாக செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகளும் அதே போல் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் சாலையை கடந்து செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
பலநாள் தேங்கி நிற்கும் மழை நீரால் கொசுக்கள் அதிகளவு உற்பத்தியாகி இரவு நேரங்களில் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கொசுக்கள் கடிப்பதால் தொற்றுநோய் பரப்பும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மழை பெய்யும்போது ஊருக்குள் தண்ணீர் தேங்கி நிற்காமல் பள்ளமான பகுதிக்கு செல்லும் வகையில் சாலையை உயர்த்தி அமைப்பதற்கு திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



