• Fri. Apr 17th, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

தேர்தல் வாக்குறுதிகள் கண்டிப்பாக இது ஒரு ‘ஹீரோ’ அறிக்கையாக இருக்கும்-சிடி ஆர் நிர்மல் குமார்..,

ByKalamegam Viswanathan

Apr 16, 2026

தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் தவெக இணை பொதுச் செயலாளர் சிடி ஆர் நிர்மல் குமார் விசில் சின்னத்தில் போட்டியிடுகிறார். இந்த நிலையில் அவர் திருப்பரங்குன்றம் தனக்கன்குளத்தில் உள்ள தனது அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து கூறும்போது

பல ஆண்டுகளாக பாரதிய ஜனதா கட்சி ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற பெயரில் ஒட்டுமொத்த இந்தியாவையும் சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள தேர்தல் முறைதான் மக்களுக்குத் தெளிவைத் தருகிறது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் குளறுபடிகள் ஏற்பட வாய்ப்புள்ளது; ஒவ்வொரு காலகட்டத்திலும் மக்கள் தகுந்த இடைவெளியில் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்ய வேண்டும்.

இதற்குத் தேர்தல் ஆணையமும் மக்களும் தயாராக இருக்க வேண்டும். மக்கள் நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஒரு விதமாகவும், மாநிலத் தேர்தலுக்கு ஒரு விதமாகவும் சிந்தித்து வாக்களிக்கின்றனர்; இதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், பாரதிய ஜனதா கட்சி தனது கட்டுப்பாட்டைத் தக்கவைக்க, தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைத்து வட மாநிலங்களில் தொகுதிகளை அதிகரிக்கும் வகையில் தொகுதி மறுசீரமைப்பைக் கொண்டுவரத் துடிக்கிறது.

தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா போன்ற தென் மாநிலங்களில் பா.ஜ.க-விற்குப் பெரும் ஆதரவு இல்லை என்பதால், இங்குள்ள தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைத்து, உத்திரப்பிரதேசம் போன்ற வட மாநிலங்களில் செல்வாக்கை நிலைநாட்டப் பார்க்கிறார்கள். இந்த மசோதா நிறைவேறினால் இந்தியாவிற்கே இழைக்கப்படும் வரலாற்றுத் துரோகமாக இது அமையும்.

பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை எப்படிப் பார்க்கிறீர்கள்:

மசோதாவில் அவர்கள் முழுமையாக என்ன செய்யப்போகிறார்கள் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. அது பெண்களின் வளர்ச்சிக்கான உண்மையான முயற்சியாக இருந்தால் வரவேற்போம். ஆனால், தேர்தல் வாக்குக்காகவோ அல்லது மதம் சார்ந்த சாயம் பூசும் முயற்சியாகவோ இருந்தால் கண்டிப்பாக எதிர்ப்போம்.

SIR முறைக்கு எதிர்ப்பு வந்தது ஆனால் பாண்டிச்சேரியில் அதிக வாக்குப்பதிவு நடந்துள்ளதே:

SIR முறையைச் செயல்படுத்திய விதத்தில் உள்ள பாகுபாட்டைத் தான் நாங்கள் எதிர்க்கிறோம். மக்கள் நலன் சார்ந்து எந்த ஒரு திட்டமும் செயல்படுத்தப்பட்டால் அது வரவேற்கத்தக்கது.

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக-வின் நடவடிக்கைகள் எப்படி உள்ளது என்ற கேள்விக்கு:

திமுக இதில் வெறும் கண் துடைப்பு நாடகத்தையே நடத்துகிறது. பா.ஜ.க-வுடன் அவர்களுக்கு இணக்கமான உறவு உள்ளது. வெளிப்படையாகக் கருப்புக் கொடி காட்டச் சொன்னாலும், களத்தில் யாரும் அதைக் காட்டவில்லை; திமுக-வினருக்கே அதன் நோக்கம் புரியவில்லை.
அதேபோல் அதிமுக-வைப் பொறுத்தவரை, அது பா.ஜ.க-வின் கிளைக் கட்சியாகவும், மோடியின் அடிமை போலவும் செயல்படுகிறது. டெல்லியில் கொடுக்கப்படும் ‘ஸ்கிரிப்ட்’-ஐ மட்டுமே எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார். எனவே, தென் மாநில உரிமைகளுக்காக நாங்கள் மட்டுமே தொடர்ந்து குரல் கொடுப்போம்.

மற்ற தலைவர்கள் தொகுதி வாரியாகப் பிரச்சாரம் செய்யும்போது, உங்கள் தலைவர் மட்டும் மாவட்ட வாரியாகச் செல்வதில் உள்ள சிரமம் என்ன குறித்த கேள்விக்கு:

எங்களுக்கு முறையான அனுமதி கிடைப்பதில் சிக்கல் உள்ளது. தலைவரைப் பார்க்க வரும் பெரும் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் அளவுக்குக் காவல் துறையினரிடம் போதிய வசதிகள் இல்லை. மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டே பல இடங்களில் திட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன.

தவெக தலைவர் விஜய் பல பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளாமல் போவது தேர்தல் முடிவுகளைப் பாதிக்குமா? மதுரையில் எப்போது பிரச்சாரம்:

மக்களுக்கு உண்மை தெரியும். மதுரையில் பாதுகாப்பான இடங்களைத் தேர்வு செய்து வருகிறோம்; அனுமதி கிடைத்தவுடன் பிரச்சாரம் உறுதி செய்யப்படும். கோயம்புத்தூர் உள்ளிட்ட பல இடங்களிலும் எங்களது பிரச்சாரம் சிறப்பாகத் தொடர்கிறது.

இன்னும் சில நாட்களில் பிரச்சாரம் முடிவடைய உள்ளது. திருப்பரங்குன்றம் தொகுதியில் மக்களின் வரவேற்பு எப்படி இருக்கிறது? கள நிலவரம் குறித்த கேள்விக்கு:

களத்தில் மக்கள் ஒரு மாற்றத்தை விரும்புகிறார்கள். திருப்பரங்குன்றம் நகராட்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள அவனியாபுரம், அனுப்பானடி போன்ற பகுதிகளில் நான் நேரடியாகச் சென்று பார்த்தேன். பல ஆண்டுகளாக இங்கு அடிப்படை வசதிகள் எதுவுமே செய்யப்படவில்லை. குறிப்பாக, சாலைகள் மிக மோசமான நிலையில் உள்ளன. கழிவுநீர் வெளியேற்ற முறையான வசதி இல்லாததால், மழைக்காலங்களில் வீடுகளுக்குள் சாக்கடை நீர் புகுந்து மக்கள் அவதிப்படுகின்றனர். பாம்பன் நகர் பகுதியில் மொத்த மதுரையின் கழிவுநீரும் தேக்கப்படுவதால், நிலத்தடி நீர் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதிகளில் நிலத்தடி நீரின் TDS அளவு 2000-க்கும் மேல் சென்றுவிட்டதால், தண்ணீரை உபயோகிக்கவே முடியாத நிலை உள்ளது. இது தவிர, கிரிவலப் பாதையைச் சுற்றி அளவுக்கு அதிகமான மதுபானக் கடைகள் இருப்பதும், இளைஞர்களிடையே கஞ்சா புழக்கம் அதிகரித்து வருவதும் மிகப்பெரிய சமூகப் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

ஆளுங்கட்சியினரும் மற்றும் இங்கிருக்கும் சட்டமன்ற உறுப்பினரும் தாங்கள் பல திட்டங்களைக் கொண்டு வந்திருப்பதாகக் பிரச்சாரத்தில் கூறுவது குறித்த கேள்விக்கு

கடந்த காலங்களில் இங்கிருந்த பிரதிநிதிகள் யாரும் மக்களைச் சந்திக்கவே இல்லை என்பது தான் கசப்பான உண்மை. அமைச்சர்களாக இருந்தவர்களும் சரி, நகராட்சி கவுன்சிலர்களும் சரி, மக்களின் வரிப்பணத்தில் பல கோடி ரூபாய் சம்பாதிப்பதிலேயே குறியாக இருந்தார்களே தவிர, கழிவுநீர் கால்வாயையோ, தரமான சாலைகளையோ அமைக்கவில்லை. திமுக வேட்பாளர்கள் மீது பல குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன. மக்கள் இவற்றை நன்கு உணர்ந்துள்ளார்கள்.

இன்னும் சில மணி நேரத்தில் தவெக தேர்தல் வாக்குறுதிகள் வெளியாக உள்ளது. தவெகாவின் தேர்தல் வாக்குறுதிகள் 2026 தேர்தலில் எப்படி இருக்க போகிறது:

கண்டிப்பாக இது ஒரு ‘ஹீரோ’ அறிக்கையாக இருக்கும். அரசு ஊழியர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், செவிலியர்கள் மற்றும் விவசாயிகள் என அனைத்துத் தரப்பு மக்களின் கோரிக்கைகளையும் கேட்டு, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் இந்த அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியை நோக்கிய ஒரு தொலைநோக்குப் பார்வையாக இது இருக்கும் என்றார்.