புதுக்கோட்டையில் இன்று பகலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் புதுக்கோட்டை மாவட்டத்தில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து வாக்குகள் சேகரிக்கும் பரப்புரை மேற்கொண்டார். புதுக்கோட்டை மாவட்டத்தில் இரண்டு இடங்களில் அவரது பரப்புரை பயணம் நடைபெற்றதில் முதல் கூட்டமான புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் புதுக்கோட்டை வேட்பாளர் எழிலரசி, விராலிமலை வேட்பாளர் சத்திய லட்சுமி, திருமயம் வேட்பாளர் லட்சுமி, வேட்பாளர் நதியா ஆகியோரை அறிமுகப்படுத்தி பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில் தமிழ்நாட்டில் பொருளாதார அளவில் தாராள மயம் என்று சொல்வார்கள். ஆனால் இங்கு மது விற்பனையிலும் கொலை கொள்ளை கற்பழிப்பு அக்கிரமச் சம்பவங்களிலும் தாராளமயம் என்று அரசு விட்டுவிட்டது. யாரும் எதையும் செய்து கொள்ளலாம் என்கிற அளவிற்கு எல்லாம் தாராளமயம் ஆகிவிட்டது. மக்களை அந்நிய பொருட்கள் வாங்கி பயன்படுத்தும் நுகர்வோர் மந்தைகளாக மாற்றி வைத்திருக்கிறது அரசு. அயல் நாட்டவர் இங்கு வந்து இயற்கை வளங்களையும் பொருளாதாரத்தையும் கொள்ளையடித்து செல்வதற்கு தமிழ்நாட்டை ஆளும் ஆண்ட இரு கட்சிகளும் தாராளமயம் ஆக்கிவிட்டது. எந்த கம்பெனி வேண்டுமானாலும் இங்கு நுழையலாம், இங்கு அவர்கள் பொருட்களை உற்பத்தி செய்யலாம்,
விற்றுக் கொள்ளலாம். அதற்கு இங்கு உள்ள அரசு மின்சாரம் தண்ணீர் முதல் அனைத்தையும் வழங்குவதற்கு ஒத்துக்கொண்டு கையெழுத்து போடுகிறார்கள். இங்குள்ள மனித ஆற்றலை குறைந்த விலைக்கு வெளிநாட்டு கம்பெனிகள் பயன்படுத்தி. கடைசியில் 2000 கோடி 3000 கோடி நட்டம் என்று சொல்லி கம்பெனிகளை மூடிவிட்டுப் போய்விடுகிறார்கள். தமிழ்நாட்டுக்கு தான் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது.

நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வரும்போது நாட்டு மக்களுக்கு எதையும் இலவசமாக வழங்க மாட்டோம். படித்தவர் படிக்காதவர் என அனைவருக்கும் அரசு வேலை. தமிழ் மொழி ஒற்றை மொழி தான் ஆட்சி மொழியாக இருக்கும். தைல மரக்காடு, வேலிக்கருவை காடுகளை இரண்டே மாதத்தில் முற்றாக அழித்து, ஒழித்து விட்டு பலன் தரும் காப்புக் காடுகளை உருவாக்குவோம். மதுக் கடைகளை மூடிவிட்டு தென்னை மரம், பனைமரம், ஈச்ச மரங்களில் கள் இறக்குவோம், இங்கு விளையும் முக்கனிகளையும் பாதுகாக்கவும் நீண்ட நாள் வைத்திருந்து விற்பதற்கும் குளிர் பதனக் குடோன்கள் கட்டுவோம். இங்கு விளையும் அனைத்து பொருட்களையும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி உலக அளவில் ஏற்றுமதி செய்வதற்கு ஏற்பாடு செய்வோம். தற்சார்பு வாழ்க்கையை மக்களுக்கு கற்றுக் கொடுப்போம். தனியார் கல்வி நிறுவனங்களை மூடி விட்டு அரசு கல்வி நிலையங்கள் அனைத்தையும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு இணையாக் கொண்டு வருவோம்.

அனைத்து பொருட்களையும் தமிழ்நாட்டிலேயே உற்பத்தி செய்யும் அளவிற்கு தொழில் நிறுவனங்களை பெருக்குவோம். மருத்துவ சேவையில் தனியார் மருத்துவமனையில் இருக்கும் வசதிகளை விட அரசு மருத்துவமனைகளில் எல்லா வசதிகளையும் ஏற்படுத்துவோம். தரமான கல்வியும் சுகாதாரமும் இருந்தால் நாடு விரைவில் முன்னேறும் அதற்கான அனைத்து பணிகளையும் நாம் தமிழர் கட்சி செய்யும். மற்ற கட்சிகளுக்கெல்லாம் ஐந்தாண்டுகள் பத்தாண்டுகள் என வாய்ப்பு கொடுக்கும் தமிழ்நாட்டு மக்கள் ஒரு ஐந்து ஆண்டுக்கு மட்டும் நாம் தமிழர் கட்சியிடம் வாய்ப்பை வழங்கினால் டெல்லியில் கெஜ்ரிவால் கொண்டு வந்தது போல தமிழ்நாட்டையும் உண்மையிலேயே சிறந்த மாநிலமாக நாங்கள் கொண்டு வருவோம்.
இங்கு திருடர்களையும் கொள்ளை அடிப்பவர்களையும் திருடர்கள் கொள்ளையர்கள் என்று சொல்லாமல் நன்றாக செட்டில் ஆகிவிட்டார்கள் என்று சொல்ல பழகி இருக்கிறோம். இப்படித்தான் சொல்வதற்கு மக்கள் பழக்கப்படுத்தப்பட்டு விட்டார்கள். ஆனால் நாங்கள் ஆட்சிக்கு வரும்போது அனைத்தையும் மாற்றி காட்டுவோம் அதுதான் மாற்றம். உண்மையான மாற்றமாக அது இருக்கும் என்று பேசினார்.




