திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள குஜிலியம்பாறை தாலுகா ராமகிரியில்இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான மிகவும் பழமை வாய்ந்த கல்யாண நரசிங்க பெருமாள் கோவில் உள்ளது. திருமண கோலத்தில் இங்கு உள்ள நரசிம்மரை வணங்கினால் திருமண தடை நீங்கும் என்பது ஐதீகம்.

இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாத தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தேரோட்ட திருவிழா கடந்த மாதம் மார்ச் 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து கடந்த 31-ந்தேதி இரவு நரசிங்க பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, கமலவல்லி தாயார் ஆகிய தெய்வங்களுக்கு திருக்கல்யாணம் மகா உற்சவ விழா நடந்தது.
இந்த நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று (02.04.2026) நடந்தது. முன்னதாக கோவில் சன்னிதானத்தில் எம்பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய சாமிகளுக்கு பூஜைகள் செய்யப்பட்டு திருத்தேரில் வைக்கப்பட்டது. பின்னர் காலை (08.39 மணிக்கு) தேரோட்டம் தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர். சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக தேர் வீதி உலா வந்தது. அதன் பிறகு சரியாக காலை (09.41 மணிக்கு) தேர் நிலையை வந்தடைந்தது. இதையடுத்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
இதை எடுத்து வருகின்ற 5-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) புஷ்பயாக உற்சவம் பூர்த்தி விழாவுடன் திருவிழா நிறைவடைகிறது.

தேரோட்ட நிகழ்ச்சியில் செயல் அலுவலர் முத்துலட்சுமி, திருப்பணி கமிட்டி தலைjவர் வி.கே.ஏ. கருப்பணன், கோவில் மணியக்காரர் சதாசிவம், மூத்த அர்ச்சகர் ராமகிருஷ்ணன், அர்ச்சகர்கள் ராஜேஷ், ரமேஷ், கோவில் இளைஞர் நற்பணி மன்றத்தினர் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தேரோட்டம் நடைபெறுவதையொட்டி குஜிலியம்பாறை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.




