புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆறு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இந்த ஆறு சட்டமன்ற தொகுதிகளில் ஒரு காலத்தில் அதிமுக ஆறு சட்டமன்ற உறுப்பினர்களை பிடித்திருந்தது. அதன் பின்னர் திமுக அதிமுக இரண்டு கட்சிகளுக்கும் மூன்றுக்கு மூன்று என்ற நிலையில் இருந்தது.

2021 தேர்தலில் திமுக ஐந்து இடங்களையும் அதிமுக ஒரு இடத்தை மட்டுமே பிடித்திருந்தது. இந்த வெற்றி தோல்விகள் அனைத்துக்கும் பின்புலமாக இருந்தது புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும்பான்மையாக இருந்த முத்தரையர் என வாக்காளர்கள் என்பது அனைத்து கட்சிகளுக்கும் தெரியும். ஆனாலும் வாய் திறந்து வெளியில் சொல்ல மாட்டார்கள். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடிக்கு கிழக்குப் பகுதியில் எந்த ஊரில் வந்து விஜயபாஸ்கர் பேசினாலும் தொடர்ந்து நான் விராலிமலை சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெறுவதற்குக் காரணம் எனது உறவினர்கள் எனக்கு வாக்களிக்க மாட்டார்கள் ஆனால் முத்தரையர் இன மக்கள் தான் எனக்கு விசுவாசம் ஆக இருக்கிறார்கள் என்று மேடைக்கு மேடை முழங்குவார்.
ஆனாலும் அதிமுகவில் இரண்டு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி ஒரு மாவட்ட செயலாளரின் பதவியை உருவாக்கி அதை வைரமுத்து என்பவருக்கு கொடுத்திருக்கிறார். மீதமுள்ள நான்கு தொகுதிகளை அதிமுக வடக்கு மாவட்டம் என்கிற பெயரில் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அவர் வைத்திருக்கும் நான்கு தொகுதிகளில் ஆலங்குடி மற்றும் புதுக்கோட்டையை தனி அதிமுக அரசியல் மாவட்டமாக பிரித்து அதில் மாவட்ட செயலாளராக முத்தரையர் இன மக்களின் ஒருவரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை கடந்த பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.
தேர்தல் நடக்கும் இந்த நேரத்தில் அந்த கோரிக்கை சற்று வலுவாக உள்ள தொடங்கி இருக்கிறது. அந்த வகையில் தான் அண்மையில் வாகைத்தமிழர் முன்னேற்ற சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்ற போது அந்த சங்கத்தின் தலைவர் புஷ்பராஜ் திமுகவாக இருக்கட்டும் அதிமுகவாக இருக்கட்டும் எங்கள் இனத்துக்கு யார் முக்கியத்துவம் தருகிறார்களோ அவர்களை நாங்கள் வெற்றி பெறச் செய்ய தயாராக இருக்கிறோம். புதுக்கோட்டையில் இருக்கும் ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் அவர்களை வெற்றி பெற வைக்கிறோம் என்று கூறி இருக்கும் கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதற்குக் காரணம் அதிமுகவில் உள்ளதைப் போலவே திமுகவிலும் இருக்கும் இரண்டு மாவட்டச் செயலாளர்களும் புஷ்பராஜ் குறிப்பிடும் இனத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல.

அதேபோல் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் எதிர்க்கட்சியாக இருக்கும் போது கட்சிகளை பலப்படுத்திக் கொள்ள முத்தரையர் இனத்தைப் பயன்படுத்திக் கொள்வதும் ஆளுங்கட்சியாக வரும்போது அவர்களை கருவேப்பிலையைப் போல தூக்கி எறிவதும் வழக்கமாக இருப்பதால் இந்த முறை கொதித்தெழுந்து இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். மேலும் ஒரு காலத்தில் அதிமுகவில் ஆறு தொகுதிகளும் அவர்கள் கையில் வைத்திருந்த நிலையில் இப்போது மூன்று தொகுதிகளை பாஜகவில் ஒதுக்கி இருப்பதும் அதில் கூட ஒருவரும் இந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என்பதும் பெரும் புயலாக உருமாறி இருக்கிறது. இது தேர்தல் நேரத்தில் வாக்காளர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தும் என்பதிலும் மாற்றமில்லை.




