• Wed. Mar 25th, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு..,

ByKalamegam Viswanathan

Mar 25, 2026

மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நிலவி வரும் சமையல் எரிவாயு (Gas) தட்டுப்பாடு காரணமாக, பக்தர்களுக்கான அன்னதானம் தற்போது விறகு அடுப்புகளைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்டு வருகிறது.

திருப்பரங்குன்றம் முருகன் கோவில் வளாகத்தில் உள்ள சஷ்டி மண்டபத்தில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் அன்னதானத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் 125 பேருக்கும், இதன் உபகோவிலான சொக்கநாதர் கோவிலில் 50 பேருக்கும் என மொத்தம் 175 பேருக்கு நாள்தோறும் மதியம் 12:30 மணியளவில் அன்னதானம் வழங்கப்படுகிறது.

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் போர் சூழல் காரணமாக, வளைகுடா நாடுகளிலிருந்து எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக நாடு முழுவதும் கேஸ் தட்டுப்பாடு நிலவுகிறது. குறிப்பாக தமிழகத்தில் வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக, திருப்பரங்குன்றம் கோவில் அன்னதானக் கூடத்திற்குத் தேவையான சிலிண்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அன்னதானத் திட்டம் தடைபடக் கூடாது என்பதற்காக, கோவில் நிர்வாகம் சார்பில் கற்களைக் கொண்டு தற்காலிகமாக விறகு அடுப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

வழக்கமாக கேஸ் அடுப்பில் சமைக்கப்படும் கூட்டு, பொரியல், ரசம், சாம்பார் மற்றும் சாதம் ஆகியவற்றை தற்போது சமையல் கலைஞர்கள் விறகு அடுப்பிலேயே சமைத்து வருகின்றனர். வெள்ளிக்கிழமைகளில் கூடுதலாக பாயசம் மற்றும் வடை ஆகியவையும் விறகு அடுப்பில் தயார் செய்யப்படுகின்றன.

சிலிண்டர் தட்டுப்பாடு சரியாகி, நிலைமை சீராகும் வரை இந்த விறகு அடுப்பு முறை தொடரும் எனே கோயில் நிர்வாகம் தெரிவிள்ளது.