தான் இறந்த பிறகும் கூட உறுப்பு தானத்தின் வாயிலாக நான்கு பேருக்கு வாழ்வளித்த பெண்மணி. அரசு மரியாதையோடு அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவர்கள் இறுதி மரியாதை செலுத்தினர்.

மதுரை மாவட்டம் சத்திரப்பட்டி அருகே உள்ள சத்திர தொண்டைமான் பட்டியைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மனைவி கவிதா (வயது 51). இவர் கடந்த மார்ச் 16ஆம் தேதி பிற்பகல் மதுரை திருப்பாலை அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது வாகனம் மோதியதில் விபத்து ஏற்பட்டு கீழே விழுந்து தலைக்காயம் அடைந்தார்.
இந்நிலையில் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை 108 ஆம்புலன்ஸ் மூலம் வரவழைக்கப்பட்டு அவசர விபத்து சிகிச்சை பிரிவில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனை தலைக்காயப்பிரிவு 101 ICU வார்டில் சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்த போதும் இன்று காலை 8.26 மணி அளவில் மருத்துவர்களால் மூளைச்சாவடைந்ததாக அறிவிக்கப்பட்டார். இதனை அடுத்து கவிதாவின் உறவினர்கள் உடல் உறுப்பு தானம் செய்ய முன் வந்தனர். அவரது கணவர் ஆனந்தனிடம் ஒப்புதல் பெறப்பட்டது.
புதுக்கோட்டையில் உள்ள முத்து மீனாட்சி மருத்துவமனைக்கு கல்லீரலும், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மற்றும் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தலா ஒரு சிறுநீரகமும், கருவிழிகள் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டன. தீவிர விபத்து சிகிச்சைப் பிரிவில் உடற்கூராய்வு செய்யப்பட்டு உரிய மரியாதையுடன் அவரது குடும்பத்தாரிடம் காவல்துறையின் மூலம் உடல் ஒப்படைக்கப்பட்டது.
இது குறித்து மருத்துவமனை முதல்வர் அருள் சுந்தரேஸ் குமார் கூறுகையில், இறந்த கவிதாவின் உறவினர்களுக்கு மருத்துவமனை சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

காவல் துறைக்கு அரசு இராஜாஜி மருத்துவமனை சார்பாக எங்களின் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேற்கண்ட நபரின் உடல் உறுப்பு தானத்தால் நான்கு நபர்களுக்கு மேற்பட்டவர்கள் பயன் பெற்றுள்ளனர். உடல் உறுப்பு தானம் செய்தவருக்கு தமிழக அரசு சார்பாக இறுதி மரியாதை செய்வதற்காக மதுரை மாவட்ட நிர்வாகத்திடம் அன்னாரின் உடல் உரிய மரியாதையுடன் அனுப்பி வைக்கப்பட்டது’ என்றார்.




