• Wed. Apr 29th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

புதிய மருத்துவ கட்டடங்கள் திறந்து வைத்த அமைச்சர்..,

ByS. SRIDHAR

Mar 14, 2026

புதுக்கோட்டை மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ரூ.8.86 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய மருத்துவக் கட்டடங்கள் மற்றும் புற்றுநோய் சிகிச்சைக்கான அதிநவீன கருவியினை அமைச்சர்கள் இன்று மார்ச் 14- திறந்து வைத்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, கீரனூர் அரசு மருத்துவமனையில் ரூ.3.50 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 20 படுக்கைகள் கொண்ட கூடுதல் கட்டடத்தை அமைச்சர்கள் திறந்து வைத்தனர். இந்த புதிய கட்டடத்தில் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு, பிரசவ அறை மற்றும் நவீன ஆய்வக வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

புற்றுநோய் சிகிச்சை மையம்
இதனைத் தொடர்ந்து, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரூ.5.36 கோடி மதிப்பீட்டில், 5,000 சதுரடி பரப்பளவில் தரை மற்றும் ஒரு தளத்துடன் கூடிய புற்றுநோய் கதிரியக்க சிகிச்சை மையக் கட்டடத்தை அமைச்சர்கள் அர்ப்பணித்தனர்.

இங்கு ரூ.110 லட்சம் மதிப்பிலான அதிநவீன ‘டெலிகோபால்ட்’ சிகிச்சை கருவி நிறுவப்பட்டுள்ளது. இந்த மையத்தில் அமைக்கப்பட்டுள்ள 20 படுக்கைகள் கொண்ட கதிர்வீச்சு வார்டில் மார்பகப் புற்றுநோய், கருப்பை கழுத்துப் புற்றுநோய் மற்றும் வாய்குழி புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்படும். இதன் மூலம் புதுக்கோட்டை மட்டுமல்லாது காரைக்குடி, சிவகங்கை உள்ளிட்ட அண்டை மாவட்ட மக்களும் பெரும் பயன் பெறுவார்கள்.

இந்நிகழ்ச்சியில் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் கலந்துகொண்டு புதிய வசதிகளைத் திறந்து வைத்தனர்.

அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் ப.செந்தில்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் வை.முத்துராஜா எம்.சின்னத்துரை , மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில் மற்றும் மருத்துவக் கல்லூரி முதல்வர் எஸ்.கலைவாணி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.