• Tue. Nov 11th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

மத்திய அரசின் உயர் கல்வி நிலையங்களில் “7 ஆண்டுகளில் 122 மாணவர்கள் தற்கொலை”

நாடு முழுவதிலும் உள்ள ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட மத்திய அரசின் உயர் கல்வி நிலையங்களில் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் 2020-ஆம் ஆண்டு வரையில் 122 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.


இதில் 27 பேர் பட்டியலின மற்றும் பழங்குடியினர் பிரிவு மாணவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
சென்னை ஐஐடி தொடங்கி நாடு முழுவதும் உள்ள பல்வேறு உயர் கல்வி நிறுவனங்களில் பாகுபாடு காட்டப்படுவதாகவும் இதன்காரணமாக மாணவர்களின் தற்கொலை தொடர்கதையாகி வருவதாகவும் கல்வியாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்துள்ளது.


உயர் கல்வி நிலையங்களில் சிறுபான்மையினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்களின் தற்கொலை விவரங்களை வழங்குமாறு மக்களவையில் நாமக்கல் தொகுதி எம்.பி சின்ராஜ் கேட்டிருந்தார்.

இதற்கு மத்திய கல்வித்துறை அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரையில் ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட மத்திய அரசின் உயர் கல்வி நிலையங்களில் 122 மாணவர்கள் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐஐடி கல்வி நிறுவனங்களில் 34 மாணவர்கள் இன்னுயிரை மாய்த்துள்ளனர். இதில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் 13 பேரும் பட்டியலின பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் 5 பேரும் அடங்குவர் என்று கூறியுள்ளது.


மேலாண்மை கல்வி நிறுவனமான ஐஐஎம்மில் 5 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்றும், இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் 9 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும், மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

NIT என்று அழைக்கப்படும் தேசிய தொழில்நுட்பக் நிறுவனத்தில் கடந்த ஏழு ஆண்டுகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த 11 மாணவர்கள், பட்டியலின பிரிவைச் சேர்ந்த 6 மாணவர்கள் உள்பட 30 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. அதேபோல, நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மத்திய பல்கலைக்கழகங்களில் 37 மாணவர்கள் தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன.


மாணவர்களிடம் பாகுபாட்டை குறைக்கும் வகையிலும் சக மாணவர்களால் ஏற்படும் பிரச்னைகளை தடுக்கும் வகையிலும் யூஜிசி மூலம் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கப்பட்டிருப்பதாகவும் மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.