கோவை மாநகரையே உலுக்கிய 1998-ம் ஆண்டு தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தின் 28-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.
உயிரிழந்த 58 அப்பாவி மக்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி, பேரூர் நொய்யல் படித்துறையில் விஸ்வ இந்து பரிஷத்தின் தர்ம யாத்திரா அமைப்பு சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

விஸ்வ இந்து பரிஷத் மாநில தர்ம யாத்திரா அமைப்பாளர் சிவலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், குண்டுவெடிப்பில் பலியான 58 பேரின் பெயர்களும் ஒவ்வொன்றாக வாசிக்கப்பட்டன. உயிரிழந்தவர்களின் நினைவாக நொய்யல் படித்துறையில் திதி கொடுக்கப்பட்டு, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.இதனைத் தொடர்ந்து ஏழை – எளிய மக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விஸ்வ ஹிந்து பரிஷத் தர்ம யாத்திரா மாநில அமைப்பாளர் சிவலிங்கம் கூறும்போது : இந்தத் துயரச் சம்பவத்தை அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்கக் கூடாது எனத் தமிழக அரசைச் சாடினார்.
”மும்பை தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்களுக்கு அந்தந்த மாநில அரசுகளே நினைவு தினத்தை அனுசரிக்கின்றன. அதேபோல், தமிழக அரசும் பிப்ரவரி 14-ஐ அதிகாரப் பூர்வமாக அனுசரிக்க வேண்டும்.குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்ட ஆர்.எஸ்.புரம் பகுதியிலேயே உயிரிழந்தவர்களுக்காக நினைவுத் தூண் அமைக்க வேண்டும்.”

“பாரதத்தின் பொருளாதாரத்தைச் சீர்குலைக்கவும், தேசத் தலைவர்களை அச்சுறுத்தவும் திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்தச் செயல் மீண்டும் அரங்கேறக் கூடாது. அன்று காயம் அடைந்த 200-க்கும் மேற்பட்டோர் இன்றும் ஊனத்துடன் வேதனையைச் சுமந்து வருகின்றனர்.” என்றவர்,”தமிழகத்தில் உள்ள சில அரசியல் கட்சிகள் இதனைப் புறக்கணிப்பது வேதனை அளிப்பதாக தெரிவித்தார்.திராவிட மாடல் அரசு இதனை அரசியல் பிரச்சினையாகப் பார்க்காமல், நாட்டின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.” எனவும்,கடந்த 1998-ம் ஆண்டு இதே நாளில்,அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் எல்.கே. அத்வானியின் தேர்தல் பிரச்சாரத்தை இலக்காகக் கொண்டு கோவையில் 18 இடங்களில் குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டன.

இதில் 58 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று 28 ஆண்டுகள் கடந்த நிலையிலும், “மறக்க மாட்டோம், மன்னிக்க மாட்டோம்” என்ற வாசகங்களுடன் இந்து அமைப்பினர் கோவையில் பல்வேறு இடங்களில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.






