• Sun. Jun 28th, 2026
WhatsAppImage2026-06-25at2148342
previous arrow
next arrow
Read Now

துணிச்சலாக பேசிய மூதாட்டி; உடனடி நடவடிக்கை எடுத்த அமைச்சர்..,

Byமுகமதி

Feb 11, 2026

புதுக்கோட்டை அருகே உள்ள வல்லத்திராகோட்டையில் சாலை விரிவாக்க பணி துவக்க விழா நடைபெற்றது. புதுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி செல்லும் சாலையில் இரண்டு கட்ட பணிகள் நிறைவடைந்து மூன்றாம் கட்ட பணி சுமார் 48 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இப்பணி துவங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியை துவங்கி வைப்பதற்காக தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு சிவ.வீ.மெய்யநாதன் வந்திருந்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அதன் பிறகு அப்பகுதியில் உள்ள கிராம பெண்கள் அவரை சூழ்ந்து கொண்டு ரேஷன் கடை தனியாக வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்தனர். அப்போது அங்கு வந்த மூதாட்டி ஒருவர் ஆவேசமாக எனது ஊர் பாலவாக்கம். இந்த ஊரில் முன்பெல்லாம் இது வழியாக வரும் பேருந்துகள் நின்று செல்லும். ஆனால் இப்போது எந்தப் பேருந்துகளையும் இங்கு நிறுத்துவதில்லை. வெளியூருக்கு சென்று விட்டு இரவு பத்து மணிக்கு வந்தால் நாங்கள் வல்லத்திராகோட்டை பேருந்து நிறுத்தத்தில் இறங்கி நீண்ட தூரம் நடந்து வந்து எங்களது வீட்டுக்கு செல்ல வேண்டி இருக்கிறது.

எனவே அனைத்து பேருந்துகளும் பாலவாக்கம் பள்ளி அருகே நின்று செல்ல நீங்கள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சரிடம் கூறியவுடன், உடனே புதுக்கோட்டை போக்குவரத்து கழக மேலாளருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது இந்த மக்கள் சிரமப்படுவதை சொன்னதோடு மட்டும் நிற்காமல் நீங்கள் வந்து இருந்து இன்று முதல் அனைத்து பேருந்துகளையும் நிறுத்தி செல்ல வலியுறுத்துங்கள் என்று கூறியதோடு இதோ இந்த மூதாட்டி சொல்வதைக் கேளுங்கள் என்று தனது தொலைபேசியை அந்த மூதாட்டியிடம் கொடுத்து பேசச் செய்தார். அரசு போக்குவரத்து கழக மேலாளரிடம் அந்த மூதாட்டி தனது கோரிக்கை முன் வைத்தார். அவர் நேரில் வந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதனால் அந்த மூதாட்டியும் மிகவும் மகிழ்ச்சியோடு சென்றார்.

இந்த நிகழ்ச்சியானது அங்கிருந்து அனைவரையும் வியப்படையச் செய்தது. துணிச்சலாக பேசிய அந்த மூதாட்டியை அங்கிருந்தவர்கள் பாராட்டியதோடு உடனடி நடவடிக்கை எடுத்த அமைச்சர் மெய்யநாதனுக்கு நன்றியும் தெரிவித்தனர்.