கோவை மாவட்டம், சூலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பட்டணம் கிராமத்தில், மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரிக்காமல் தினசரி பொது இடங்களில் கொட்டப்படுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

வாசுதேவன் கோவில் பின்புறம் பகுதியில் கிராம நிர்வாகம் சார்பில் குப்பைகள் குவிக்கப்பட்டு வருவதாகவும்,அவற்றை அகற்றாமல் அதே இடத்தில் தீயிட்டு எரிப்பதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறி வருவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதன் காரணமாக காற்று மாசு அதிகரித்து, காற்றின் மூலம் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறும் அப்பகுதி மக்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்கள் காய்ச்சல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட உடல்நல பாதிப்புகளுக்கு உள்ளாகி வருவதாக தெரிவிக்கின்றனர்.

இந்த பிரச்சனை குறித்து கிராம சபை கூட்டங்களில் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே, கோவை மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, குப்பைகளை முறையாக தரம் பிரித்து சேகரித்து அகற்றுவதோடு, பொதுஇடங்களில் குப்பை எரிப்பதைத் தடை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.










