கோவையில் மது போதையில் பேருந்து ஏறி நபர் ஒருவர் பேருந்து நிற்காத நிறுத்தத்தில் இறங்க வேண்டும் என அடம் பிடித்து நடத்துனரை தாக்கிய அதிர்ச்சியை ஏற்படுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோவை, காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று மாலை சோமனூர் நோக்கி தடம் எண் 90 என்ற எண் கொண்ட அரசு சொகுசு பேருந்து சென்று கொண்டு இருந்தது. இந்த பேருந்தில் ஒரு நபர் மதுபோதையில் ஏறி உள்ளார்.
பேருந்து லட்சுமி மில் சிக்னலை தாண்டி சென்ற போது அடுத்த நிறுத்தமான எஸ்.சோ பங்க் பகுதியில் பேருந்து நிறுத்தும்படி அந்த நபர் நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார்.
அந்தப் பேருந்து குறிப்பிட்ட சில நிறுத்தங்களில் மட்டுமே நிற்கும் சொகுசு பேருந்து என்பதால் அந்த இடத்தில் நிறுத்த முடியாது என நடத்துனர் கூறி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த நபர் தகாத வார்த்தைகளால் பேசிய ரகளையில் ஈடுபட்டார்.

ரகளை முற்றியதால், ஓட்டுநர் பேருந்தை சாலையோரம் நிறுத்தினார். போதை ஆசாமி பேருந்தில் இருந்து கீழே இறக்க முயன்ற போது அவர் நடத்துனரை தாக்கி கைகலப்பில் ஈடுபட்டார்.
பேருந்தில் நடந்த இந்த அத்துமீறல்கள் அங்கு இருந்த பயணி ஒருவர் அவரது செல்போனில் வீடியோ பதிவு செய்தார். அதில் அந்த நபர் நடத்துனரை ஒருமையில் பேசுவதும், அவரை தாக்குவதும் தெளிவாக பதிவாகி உள்ளது. இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.




