தஞ்சை தெற்கு மாவட்ட திமுக சார்பில் பட்டுக்கோட்டை காசாங்குளம் அண்ணா அரங்கில் இன்று சமத்துவ பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சமத்துவ பொங்கல் விழாவில் பழமை மாறாமல் பெண்கள் மண்பானையில் பொங்கலிட்டனர். அதனைத் தொடர்ந்து பழமை மாறாமல் நாதஸ்வரத்திற்கு ஏற்றார்போல் ஆண்களுக்கு இணையாக பெண்களும் தப்பாட்டம் ஆடி பார்ப்பவர்கள் அனைவரையும் மகிழ்வித்தனர்.

விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவிசெழியன் கலந்து கொண்டார். அப்போது பெண்கள் மண்பானைகளில் பொங்கலிட்டு சர்க்கரைப் பொங்கலை அமைச்சருக்கு ஊட்டி மகிழ்ந்தனர். அதனைத் தொடர்ந்து அமைச்சர் கோவிசெழியன் எம்.எல்.ஏக்கள் பட்டுக்கோட்டை அண்ணாதுரை, பேராவூரணி அசோக்குமார், தஞ்சை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பழனிவேல் உள்ளிட்டோருக்கு சர்க்கரை பொங்கலை ஊட்டி மகிழ்ந்தார். பின்னர் அண்ணா அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கோவிசெழியன் பேசுகையில், அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததன் மூலம் அவர்களின் 23 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றியுள்ள ஒரே தலைவராக முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் திகழ்ந்து வருகிறார்.

அதேபோல் தமிழ்நாட்டின் எதிர்க்கட்சிகளுக்கு சிம்ம சொப்பனமாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளங்கி வருகிறார் என்றார். நிகழ்ச்சியில் நகர, ஒன்றிய, பேரூர் திமுக செயலாளர்கள் மற்றும் திமுக அனைத்து நிலை பொறுப்பாளர்கள் உள்பட 2,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.




