கோவையில் பூட்டை உடைக்காமல் கள்ளச் சாவி மூலம் கடைக்குள் புகுந்த திருடன் ஒருவன் எவ்வித பதற்றமும் இன்றி அமர்ந்து சில்லறை பணத்தை எண்ணி திருடி சென்ற சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை, ராம்நகர், பட்டேல் சாலையில் தினேஷ் என்பவருக்கு சொந்தமான ஜென்னி ஏஜென்சி என்ற குளிர்பான மொத்த விற்பனை கடை உள்ளது. நேற்று இரவு சுமார் 11 மணி அளவில் ஒரு மர்ம நபர் அங்கு வந்து உள்ளார்.
அப்போது ஷட்டர் பூட்டை உடைக்காமல், கள்ளச் சாவி பயன்படுத்தி உள்ளே சென்ற அந்த நபர் கடைக்குள் மின் விளக்கை போட்டால், சிக்கிக் கொள்வோம் என்பதால் கையில் இருந்த தீப்பெட்டியை பயன்படுத்தி தீக்குச்சிகளை பற்ற வைத்து அந்த வெளிச்சத்தில் ஒவ்வொரு மேஜையாகச் சோதனை செய்து உள்ளார். மேஜையில் அமர்ந்து நிதானமாக இரும்பு ட்ராயர்ஸ் ஒவ்வொன்றாக திறந்து பார்த்து உள்ளார். சில்லறை பணத்தை எடுத்து எண்ணி பார்த்து தனது பின் பக்க பேண்ட் பாக்கெட்டில் திணித்துக் கொண்டு வெளியே செல்கிறார்.

இன்று காலை கடைக்கு வந்த தினேஷ் கடையின் ஷட்டர் திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் கைரேகை நிபுணர்களைக் கொண்டு கைரேகையை சேகரித்தனர். சில்லறை பணம் மட்டுமே காணாமல் போனாலும், கள்ளச் சாவி மூலம் பூட்டை உடைத்து திறந்து உள்ளே நுழைந்த விதம் அப்பகுதியில் மற்ற கடைகள் மற்றும் நிறுவனங்களின் உரிமையாளர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
அங்கு கேமரா பொருத்தப்பட்டு இருப்பது கூட தெரியாமல் சில்லறையை எண்ணுகிறானே என இந்த சி.சி.டி.வி வீடியோவை பார்க்கும் தினேஷ் மற்றும் அவரது ஊழியர்கள் அவர்களுக்குள் பேசிக் கொள்கின்றனர் …




