அமைச்சர் சேகர்பாபு தாமே முன்வந்து பதவி விலகினால் நல்லது – பொன்.இராதாகிருஷ்ணன் கண்டன அறிக்கை
புகழ்பெற்ற சுசீந்திரம் தாணுமாலய பெருமாள் சுவாமி ஆலய தேரோட்டத்தில் கலந்து கொண்ட திமுகவின் இரண்டு அமைச்சர்களின் அருவருக்கத்தக்க
செயல்பாடு அப்புனித தேரோட்டத்தின் பெருமைக்கு இழுக்கு சேர்ப்பதாக அமைந்துள்ளது.

இவ்வமைச்சர்கள் இந்த தேரோட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று எவரும் எதிர்பார்க்கவே இல்லை. இத்தேரோட்டம் முழுக்க முழுக்க பக்தர்களின் பங்களிப்போடு அவர்களின் கஷ்ட நஷ்டங்களை தீர்ப்பதற்காக பன்னெடுங்காலமாக நடந்து வரும் புனித நிகழ்ச்சியாகும்.
இத்தேரோட்டத்தில் கலந்துகொண்ட அறநிலையத்துறை அமைச்சர் திரு. சேகர் பாபு அவர்கள், அவர் வழக்கமாக சாப்பிடும் உணவை தேர்த் திருவிழாவை காண வந்த பக்தர்கள் சாப்பிடுகிறார்களா? என்று கேட்டிருப்பது அருவருப்பின் உச்சம். இந்த செயலுக்காக அமைச்சர் திரு.சேகர்பாபு அவர்களை தமிழக முதல்வர் அவர்கள்
அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும், குறைந்தபட்சம் அறநிலைத்துறையிலிருந்தாவது மாற்ற வேண்டும்.
கன்னியாகுமரி மாவட்டத்தின் மக்கள் செய்த பாவங்களில் ஒன்று இந்த மாவட்டத்தைச் சேர்ந்த திரு. மனோதங்கராஜ் அவர்களை அமைச்சராக பெற்றது. தனது சொந்த மத தெய்வத்தின் மீதும் நம்பிக்கை கிடையாது, பிற மதத்தைச் சேர்ந்த தெய்வங்களை இழிவுபடுத்துவதிலும் தவறியதில்லை. மாவட்ட மக்களை ஜாதி ரீதியாகவும், மதரீதியாகவும் பிரித்து அரசியல் ஆதாயம் தேடி வரும் திரு.மனோதங்கராஜ் அவர்களை தனது பக்கத்தில் வைத்துக்கொண்டு அறநிலையத்துறை அமைச்சர் பேசிய பேச்சுக்கள் எந்த மதத்தைச் சேர்ந்த எக்கட்சியைச் சேர்ந்த எம் மக்களாலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. திரு.சேகர்பாபு அவர்கள் தன்னுடைய தவறான பேச்சுக்களுக்கும், நடத்தைக்கும் பகிரங்க மன்னிப்பு கேட்டு தானாக முன்வந்து அமைச்சர் பதவியில்
இருந்து விலகிக் கொள்வது அவருக்கு நல்லது. இல்லையெனில் மக்களால் துரத்தியடிக்கப்படும் காட்சியை அவர் கண்கூடாக காண இருக்கிறார் என்பதை அழுத்தத்துடன் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.




