திண்டுக்கல் மாவட்டம், கோபால்பட்டி பகுதியில் அடிப்படை வசதிகளை உடனடியாக ஏற்படுத்தக் கோரியும், பல்வேறு உள்ளூர் பிரச்சினைகளைத் தீர்க்கக் கோரியும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் கோபால்பட்டி பேருந்து நிலையம் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் எஸ்.எம். நிர்மல்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சாணார்பட்டி ஒன்றிய செயலாளர் நாகூர் கனி, ஒன்றிய இணை செயலாளர் ரஞ்சித்குமார், பொருளாளர் அழகர்சாமி, துணைச் செயலாளர்கள் ஹரிஹரன், பாலசுப்ரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஒன்றிய நகரக் கிளை நிர்வாகிகள், மகளிர் அணியினர் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் வேம்பார்பட்டி, கணவாய்பட்டி, அஞ்சுகுழிப்பட்டி, கோம்பைப்பட்டி ஆகிய ஊராட்சி பகுதிகளில் கோபால்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரமும் மருத்துவர் பணியாற்ற வேண்டும்; கோம்பைப்பட்டி மற்றும் கே.மேட்டுப்பட்டிக்கு இடுகாட்டிற்கு செல்ல சாலை வசதி மற்றும் நியாயவிலைக்கடை அமைக்க வேண்டும்; அஞ்சுகுழிப்பட்டிக்கு பேருந்து நிலையம் மற்றும் கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும்; ஒன்றியத்துக்குட்பட்ட மலைக்கிராமங்களில் தொலைத்தொடர்பு வசதி வழங்க வேண்டும்; கோம்பைப்பட்டி உள்ளிட்ட அனைத்து ஊராட்சிகளிலும் ஆற்று மணல் மற்றும் கனிம வளங்கள் கொள்ளையைத் தடுக்க வேண்டும்;

கணவாய்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் அரசு வழங்கிய இடங்களுக்கு உடனே பட்டா வழங்க வேண்டும்; மலைப்பட்டி பள்ளி குழந்தைகள் பள்ளிக்கு செல்வதற்கு காலை-மாலை பேருந்து வசதி மற்றும் குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும்; அஞ்சுகுழிப்பட்டி, ஏ.மேட்டுப்பட்டி சாலை வசதி, மின்விளக்கு மற்றும் குடிநீர் வசதி வழங்க வேண்டும்; கன்னியாபுரம் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும்; செடிப்பட்டி கிராமத்தில் கழிவறை கட்டடத்தை உடனடியாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்; மேல்நிலை தண்ணீர் தொட்டியை மறுசீரமைப்பு செய்ய வேண்டும்; ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் செயல்படும் தனியார் போலி மதுபான கடைகளை அகற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.




