“தாம்பரத்தின் மெரினா” என்று அழைக்கப்படும், முழுமையாக சீரமைக்கப்பட்ட சிட்லப்பாக்கம் ஏரி இன்று மாலை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. இந்த ஏரியை தமிழக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு ஆகியோர் கல்வெட்டை திறந்து வைத்து அர்ப்பணித்தனர்.

இந்த ஏரி சீரமைப்பு பணிகள் தமிழ்நாடு நீர்வளத்துறையால் ரூ.25 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டன. கழிவுநீர் ஏரிக்குள் புகாமல் தடுக்கப்பட்டு, ஏரி ஆழப்படுத்தப்பட்டு அதன் கொள்ளளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிட்லப்பாக்கம் ஏரி நன்னீர் ஏரியாக மாற்றப்பட்டதுடன், வெள்ளத்தடுப்பு பணிகளும் நிறைவேற்றப்பட்டு அந்த பகுதி வெள்ள பாதிப்புகளிலிருந்து பாதுகாக்கப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நடைபாதைகள், திறந்தவெளி அரங்கம், சிறுவர் பூங்கா, பசுமை வளாகம் போன்ற வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு வனத்துறையால் ஆயிரக்கணக்கான மரங்கள் நடப்பட்டு, தாம்பரம் மாநகராட்சியால் குழந்தைகள் விளையாட்டு பூங்கா அமைக்கப்பட்டதால், இந்த ஏரி பகுதி தற்போது காலை–மாலை நடைப்பயிற்சி மற்றும் பொழுதுபோக்கிற்கான முக்கிய மையமாக மாறியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் டி.சினேகா தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, மேயர் க.வசந்த்குமாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய எஸ்.ஆர்.ராஜா, ஏரியின் மறுபுற கரையில் நடைபாதை அமைப்பதற்காக கூடுதலாக 8 கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைத்தார்.
இதனை தொடர்ந்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசுகையில்,
“சாக்கடை நீராக இருந்த சிட்லப்பாக்கம் ஏரி, அரசு ரூ.25 கோடி ஒதுக்கீட்டில் நன்னீர் ஏரியாக மாற்றப்பட்டுள்ளது. நடைபாதை, பூங்கா, சிறுவர் விளையாட்டு வளாகம் என அனைத்து வசதிகளுடன் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது. இதுபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை அரசு விரைவாக நிறைவேற்றி வருகிறது” என்றார்.

அதேபோல் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு,
“இந்த திட்டத்தை முழுமையாக்க மேலும் 8 கோடி ரூபாய் தேவை. மாவட்ட நிர்வாகமும் தாம்பரம் மாநகராட்சியும் இணைந்து திட்ட மதிப்பீடு செய்து மீதமுள்ள நடைபாதை பணிகளை நிறைவேற்ற வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார்.




