புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட தலைமை தபால் அலுவலகம் முன்பு இன்று காங்கிரஸ் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் இதுவரை பயன்படுத்தப்பட்ட மகாத்மா காந்தி அவர்களின் பெயரை நீக்கிவிட்டு புதிதாக இப்போது இந்தியில் ஒரு பெயர் வைத்திருப்பதை எதிர்த்து இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் முருகேசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வட்டார காங்கிரஸ் தலைவர் சூர்யா பழனியப்பன், முன்னாள் கவுன்சிலர் பாபு இப்ராஹிம், நகர பொறுப்பாளர் பாரூக், ஜி எஸ் கணபதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் செங்கோடன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் சங்கர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் இளமதி அசோகன், வெள்ளைநெஞ்சன் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் முகமது கனி, முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் அசரப் அலி உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் திமுக சார்பில் கட்சியின் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் செல்ல பாண்டியன் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்துராஜா முன்னாள் எம்எல்ஏ கவிதை பித்தன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் பலரும் திரளாக வந்து கலந்து கொண்டனர். அந்த நிகழ்வில் சிறப்புரையாற்றிய முன்னாள் எம்எல்ஏ கவிதை பித்தன் பேசுகையில் இந்திய தேசத்தின் தந்தை என்று போற்றி அழைக்கப்பட்ட மகாத்மா காந்தி அவர்களது பெயர் இந்த திட்டத்தில் இருந்து பாஜக அரசு மாற்றி இருக்கிறது. இப்போது அவரது பெயரை எடுப்பார்கள்.

அதன் பிறகு அந்தத் திட்டத்தை எடுப்பார்கள். ஒரு கட்டத்தில் இப்போது இந்திய ரூபாய் நோட்டுகளில் பயன்படுத்தப்பட்டு வரும் மகாத்மா காந்தி அவர்களின் உருவப்படத்தையும் எடுத்து விடுவார்கள். இந்தியாவை காப்பாற்றுவது ஒருபுறம் இருக்க மகாத்மா காந்தியின் பெயரைக் கூட காப்பாற்ற முடியாத ஒரு நிலை இப்போது ஏற்பட்டு இருக்கிறது. தேசப்பிதாவின் காந்திக்கே இந்த நிலை . அவர்களது தொலைநோக்கு திட்டமே காந்தியின் பெயரை இல்லாமல் செய்வதுதான். இன்னும் சொல்லப்போனால் நாட்டில் காந்தியடிகளின் சிலைகளையே எடுத்து விடுவார்கள். அவரது சிலைகள் இருந்த இடத்தில் எல்லாம் கோட்சேவின் சிலைகளை வைத்தாலும் வியப்பு ஏற்படாது என்று பேசினார்.




