செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சி சண்முகம் சாலை மார்க்கெட் பகுதியில், தாம்பரம் கிறிஸ்துவ வியாபாரிகள் சங்கம் சார்பில் கடந்த 30 ஆண்டுகளாக கிறிஸ்துமஸ் பெருவிழா தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் கடந்த இரண்டு நாட்களாக கிறிஸ்மஸ் திருவிழா நிகழ்ச்சிகள் வெகு சிறப்பாக நடத்தப்பட்டன.

இந்நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, குரோம்பேட்டை நியூ லைப் ஜெம்ஸ் சபையின் தலைமை போதகர் பாஸ்டர் ஐசக் டேனியல் தலைமையிலான குழுவினர், இயேசு கிறிஸ்துவின் பிறப்பு முதல் சிலுவை மரணம் மற்றும் மூன்றாம் நாள் உயிர்த்தெழுதல் வரை உள்ள நிகழ்வுகளை தத்ரூபமாக நாடக வடிவில் அரங்கேற்றினர்.
குறிப்பாக, இயேசு கிறிஸ்து சிலுவையை சுமந்து செல்லும் காட்சி, ரத்த காயங்களுடன் சாலைகளில் நடித்துக் காட்டப்பட்ட போது, பொதுமக்கள் மற்றும் பார்வையாளர்கள் மெய்சிலிர்த்து பார்த்தனர். இந்த நாடகம் அனைவரையும் ஆழமாகக் கவர்ந்தது.
நிகழ்ச்சியின் நிறைவில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்து நற்செய்தியை அறிவிக்கும் செய்தி எடுத்துரைக்கப்பட்டது. தொடர்ந்து கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டதுடன், ஏழை எளியவர்களுக்கு கிறிஸ்மஸ் அன்பளிப்புகளும் வழங்கப்பட்டன.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பொதுவாழ்வு ஜேம்ஸ் பேராலயத்தின் தலைமை போதகர் ஐசக் டேனியல், “கிறிஸ்து பிறப்பு முதல் உயிர்த்தெழுதல் வரை உள்ள நிகழ்வுகளை தத்ரூபமாக நடத்துவதன் மூலம், மக்களிடையே அன்பு, அமைதி மற்றும் சகோதரத்துவத்தை விதைப்பதே எங்களின் நோக்கம். நாட்டில் நிலவும் பதற்றங்கள், கலவரங்கள் இல்லாமல் உலக சமாதானம் நிலவ வேண்டும் என்பதற்காக கடந்த 30 ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சியை தாம்பரம் கிறிஸ்துவ வியாபாரிகள் சங்கம் நடத்தி வருகிறது. இந்த கிறிஸ்மஸ் நன்னாளில் உலகம் முழுவதும் அமைதி நிலவ அனைவரும் சுபிட்சமாக வாழ வேண்டும்” என தெரிவித்தார்.




